IPL தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்

Indian Premier League 2022

317

இந்தியாவில் IPL தொடர் நடைபெற்றுமுடிந்துள்ள நிலையில், இலங்கை ரசிகர்களை பொருத்தவரை மிகவும் எதிர்பார்ப்புமிக்க தொடராகவும், நீண்ட இடைவேளைக்கு பிறகு விரும்பு பார்வையிட்ட IPL தொடராகவும் இந்த ஆண்டு தொடர் அமைந்திருந்தது.

குஜராத் டைட்டண்ஸ் அணி சம்பியனாக முடிசூடியிருந்த போதும், அதனைவிடுத்து இலங்கை ரசிகர்களுக்கு தமது நாட்டு வீரர்கள் பிரகாசிப்பதை பார்வையிடுவது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அதன்படி, 6 வீரர்களுக்கு IPL தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்ததுடன், அதில் ஐவர் மிகத்திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாடு திரும்பியுள்ளனர்.

>> IPL தொடரின் சம்பியனாக முடிசூடியது குஜராத் டைட்டண்ஸ்!

வனிந்து ஹஸரங்க, துஷ்மந்த சமீர, பானுக ராஜபக்ஷ, மதீஷ பதிரண மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தங்களுடைய திறமைகளை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். அவர்கள் வெளிப்படுத்திய பிரகாசிப்புக்களை நாம் பார்வையிடலாம்.

வனிந்து ஹஸரங்க – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

இலங்கையின் சார்பாக IPL தொடரில் களமிறங்கி அதீகூடிய கவனத்தை ஈர்த்த வீரராக தொடரின் நிறைவிலும் வனிந்து ஹஸரங்க மாறியிருக்கிறார்.

பெங்களூர் அணிக்காக மீண்டும் இரண்டாவது தடவையாக வாங்கப்பட்ட இவர், பெங்களூர் அணிக்கான அனைத்து போட்டிகளிலும் விளையாடியிருந்தார். 14 லீக் போட்டிகள், எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது குவாலிபையர் போட்டிகள் என்பவற்றில் இவர் விளைாடியதுடன், அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருந்தார்.

IPLT20

ஹஸரங்க தன்னுடைய 16 போட்டிகளை நிறைவுசெய்யும் போது ஒரு 5 விக்கெட் குவிப்பு உட்பட, 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார். எனினும், இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வீரர் யுஸ்வேந்திர சஹால் ஒரு விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் 27 விக்கெட்டுகளுடன் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

வனிந்து ஹஸரங்க 26 விக்கெட்டுகளை வீழ்த்தியது மாத்திரமின்றி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியையும் பதிவுசெய்திருந்தார். இதில் 4 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

வனிந்து ஹஸரங்கவை பொருத்தவரை இந்த IPL தொடரில் எதிர்பார்த்த அளவில் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார். எனினும் இவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமை பெங்களூர் அணிக்கும், இலங்கை ரசிகர்களுக்கும் ஏமாற்றமளித்திருந்தது. எவ்வாறாயினும், ஹஸரங்கவின் இந்த பிரகாசிப்பு அடுத்த வருடத்திலும் அவர் நிச்சமயாக IPL தொடரில் வெிளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

துஷ்மந்த சமீர – லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ்

லக்னோவ் சுபர் ஜயண்டஸ் அணிக்காக விளையாடிய துஷ்மந்த சமீரவுக்கு ஓரிரு போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத போதும், ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியிருந்தார்.

அணியின் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் முக்கியமானவராக இருந்த இவர், 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். துஷ்மந்த சமீர ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியிருந்தாலும், தொடரின் பிற்பகுதியில் எதிர்பார்த்த அளவிலான பிரகாசிப்புகளை வழங்கவில்லை. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய இவர் விக்கெட்டுகளின்றி 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

IPLT20

எனினும், பவர்-பிளே ஓவர்கள் மற்றும் மத்திய ஓவர்களில் சமீர பந்துவீசும் திறமை அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதேநேரம், ஒரு சில போட்டிகளில், குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், அன்ரே ரசலுக்கு எதிராக இறுதி ஓவர்களை வீசியமை போன்ற விடயங்களையும் சமீர சிறப்பாக செய்திருந்தார். எனவே, தன்னுடைய திறமையை மேலும் அதிகரித்துக்கொண்டு அடுத்துவரும் ஆண்டுகளில் இவர் மேலும் சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பானுக ராஜபக்ஷ – பஞ்சாப் கிங்ஸ்

இலங்கையிலிருந்து மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய வீரராக பானுக ராஜபக்ஷ இருந்தார். இவர் தான் களமிறங்கிய முதல் போட்டியிலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அணிக்காக வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர் என்ற பெயரை உருவாக்கிக்கொண்ட போதும், ஜொனி பெயார்ஸ்டோவின் வருகைக்கு பின்னர் இவருக்கான வாய்ப்புகள் பெரிதாக வழங்கப்படவில்லை. சிறந்த ஓட்டக்குவிப்பிலிருந்த இவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒருசில போட்டிகளுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தது.

IPLT20

தொடர் தோல்வியிலிருந்த பஞ்சாப் அணி, இவரின் வருகைக்கு பின்னர் வெற்றியை சந்தித்திருந்தது. தன்னுடைய மீள்வருகை போட்டியிலும் சிக்கர் தவானுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பானுக கட்டியெழுப்பியிருந்தார். எவ்வாறாயினும், சிறந்த ஓட்டக்குவிப்புடன் இருந்த இவருக்கு வழங்கப்பட்ட ஓய்வு, அவரை தொடர்ச்சியாக பிரகாசிப்பதற்கு விடவில்லை.

எனினும், அதிரடி சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் மூலம் கவனத்தை ஈர்த்த பானுக ராஜபக்ஷ 9 போட்டிகளில் 206 ஓட்டங்களை 159.68 என்ற ஓட்டவேகத்தில் குவித்திருந்தார். எனவே, அடுத்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாவிடினும், ஏனைய அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பானுக ராஜபக்ஷவுக்கு அதிகமாக உள்ளது.

மஹீஷ் தீக்ஷன – சென்னை சுபர் கிங்ஸ்

இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த வீரர்களில் அவர்களுடைய மிக முக்கியமான சுழல் பந்துவீச்சாளராக மஹீஷ் தீக்ஷன தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.

முதல் 3 போட்டிகளில் தங்களுடைய பந்துவீச்சாளர்களை கண்டறிவதற்கு சென்சை சுபர் கிங்ஸ் அணி தடுமாறிய போதும், மஹீஷ் தீக்ஷனவின் வருகைக்கு பின்னர் பலம் வாய்ந்த சுழல் பந்து குழாமாக சென்னை சுபர் கிங்ஸ் அணி மாறியது.

IPLT20

மஹீஷ் தீக்ஷன பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுத்ததுடன், விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவர் மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பருவகாலத்தில் சிறப்பாக பந்துவீசியுள்ளதன் காரணமாக அடுத்த ஆண்டும் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக மஹீஷ் தீக்ஷன விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதீஷ பதிரண – சென்னை சுபர் கிங்ஸ்

இலங்கை தேசிய அணியில் அறிமுகமாவதற்கு முன்னர், IPL தொடரில் களமிறங்கி சர்வதேச ரசிகர்களின் கவனத்தை லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பதிரண ஈர்த்திருந்தார்.

சென்னை அணியில் ஆரம்பத்தில் மதீஷ பதிரண இணைக்கப்படாவிட்டாலும், உபாதைக்குள்ளான நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளரான அடம் மில்னேவுக்கு பதிலாக அணிக்குள் அழைக்கப்பட்டார்.

IPLT20

மதீஷ பதிரண சென்னை அணிக்காக தொடரின் பிற்பகுதியில் இணைக்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு  அவருக்கு கிடைத்தது.

குஜராத் டைட்டண்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில், தன்னுடைய முதல் பந்திலேயே சுப்மான் கில்லின் விக்கெட்டினை கைப்பற்றிய மதீஷ பதிரண, அதேபோட்டியில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டினை கைப்பற்றினார். இதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகச்சிறப்பாக இறுதி ஓவர்களை வீசியிருந்தார்.

அதுமாத்திரமின்றி மதீஷ பதிரண இறுதி ஓவர்களை சிறப்பாக வீசக்கூடிய வீரர் என சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி போட்டிக்கு பின்னர் கூறுயிருந்தார். அதேநேரம், அடுத்த ஆண்டும் அவர் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, மதீஷ பதிரண சென்னை அணிக்காக அடுத்த ஆண்டு விளையாடுவார் என கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாமிக்க கருணாரத்ன – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இலங்கை அணியை பொருத்தவரை மொத்தமாக ஆறு வீரர்கள் IPL தொடரில் பங்கேற்றிருந்தாலும், மேற்குறித்த ஐவரும் போட்டிகளில் விளையாடியிருந்தனர். எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்னவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே அடுத்த ஆண்டு அவருக்கு மீண்டும் கொல்கத்தா அல்லது ஏனைய அணிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விகள் உருவாகியுள்ளது. எனினும், சிறந்த சகலதுறை வீரரான அவர் இலங்கை அணிக்காக சிறப்பாக பிரகாசித்து IPL தொடரில் அடுத்த ஆண்டு ஒரு இடத்தை பிடித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இறுதியாக…

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை நீண்ட நாட்களுக்கு பின்னர் 6 வீரர்களுக்கு IPL தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததுடன், 5 வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் தங்களுடைய பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தி, அடுத்த ஆண்டும் மேலும் அதிகமான வீரர்கள் IPL தொடரில் விளையாடவேண்டும் எனவும் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<