இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது RCB

Indian Premier League 2022

246
RCB beat Lucknow by 14 runs to meet Rajasthan

IPL தொடரின் எலிமினேட்டர் போட்டியில், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் (LSG) அணியை வீழ்த்திய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (RCB) இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பித்த இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி முதலில் களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. லக்னோவ் அணியின் எதிர்பார்ப்பின்படி, பெங்களூர் அணியின் தலைவர் பெப் டு பிளெசிஸ் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க, விராட் கோஹ்லி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

>> IPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்ற குஜராத்!

தொடர்ந்து கிளேன் மெக்ஸ்வேலும் ஆட்டமிழந்த போதும், அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான ரஜட் பட்டிதார் தன்னுடைய கன்னி T20 சதத்தை பதிவுசெய்ய மறுமுனையில் தினேஷ் கார்திக் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை சிறப்பாக நிறைவுசெய்தார்.

ரஜட் பட்டிதார் வெறும் 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார். இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்புடன் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. லக்னோவ் அணியின் பந்துவீச்சில் மொஷின் கான் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியிருந்த போதும், மத்திய ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவித்து பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்திருந்தது.

குறிப்பாக கே.எல்.ராஹுல் (79) மற்றும் தீபக் ஹூடா (45) ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடி ஒரு கட்டத்தில் லக்னோவ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதாற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். எனினும், வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழக்க லக்னோவ் அணி தடுமாறத்தொடங்கியது.

இறுதிக்கட்டத்தில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோர் சிறப்பாக பந்துவீச லக்னோவ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெறமுடிந்தது. பந்துவீச்சில் ஹெஷல்வூட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்றுள்ள பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முகமாக முதலாவது குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்வரும் 27ம் திகதி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<