2 மில்லியன் டொலர்களை மக்களுக்காக வழங்கும் இலங்கை கிரிக்கெட் சபை

Sri Lanka Cricket

468

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டின் சுகாதார துறைக்கு ஆதரவாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு பல்வேறுப்பட்ட பொருளாதார நெருக்கடிகளை கடந்த பல மாதங்களாக சந்தித்துவருகின்றது.

மீண்டும் RCB அணிக்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

இதில் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதிலும் நாடு கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. இதன்காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மக்களின் சுகாதார காரணிகளுக்காக வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, குழந்தைகளுக்கான சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக, குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், மீதமுள்ள ஒரு மில்லியன் டொலர்கள் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, “நாட்டிற்கு தேவைப்படும் இந்த நேரத்தில் நன்கொடையை வழங்குவதில் இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இந்த சவாலான காலகட்டத்தை கடக்க எமது நாட்டுக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம்”  என்றார்.

இதேவேளை இந்த நன்கொடையை அவசரத் தேவையாக கருதி உடனடியாக மேற்குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு நேற்றைய தினம் (24) இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு அனுமதி அளித்திருந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<