அவுஸ்திரேலிய அணியுடன் இணையும் டேனியல் வெட்டோரி

Australia tour of Sri Lanka 2022

240
Vettori

அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்றுவிப்பாளர்களாக நியூசிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி மற்றும் அன்ரே பொரவக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் என்ரு மெக்டொனால்ட்டின் கீழ் பணிபுரியவுள்ள இவர்கள் இருவரும், எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடருடன் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர். இதில், அன்ரே பொரவக் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியா A அணிக்கும் பயிற்றுவித்து வருகின்றார்.

>> IPL தொடரிலிருந்து நேரடியாக இலங்கை வந்து சதமடித்த பானுக

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாளரான ஜெப் வோகனுக்கு பதிலாக டேனியல் வெட்டோரி மற்றும் அன்ரே பொரவக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெப் வோகன் டஸ்மானியா டைகர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி, மெக்டொனால்டின் கீழ் IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை டேனியல் வெட்டோரி அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து வெட்டோரி பணியாற்றியிருந்தார்.

அன்ரே பொரவக் சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை சிறந்த உயர் செயற்திறன் பயிற்றுவிப்பாளராக பார்க்கப்படுகிறார். இவர் மெக்டொனால்டுடன் இணைந்து ஏற்கனவே விக்டோரியா மற்றும் மெல்போர்ன் ரேஞ்சர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<