பேங்கொக் நகரில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் மூலம் 2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான, ஹொக்கி தொடருக்கு இலங்கை ஆடவர் ஹொக்கி அணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதன்படி தகுதிகாண் தொடரில் முன்னிலை பெற்ற ஆறு அணிகளில் ஒன்றாக இலங்கை ஆடவர் ஹொக்கி அணி மாறியிருப்பதோடு, சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றது.
ஆடவர் ஆசிய தகுதிகாண் ஹொக்கியில் இலங்கைக்கு முதல் தோல்வி
இந்த தகுதிகாண் தொடரில் சிங்கப்பூரினை 5-2 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை ஹொக்கி அணி, பங்களாதேஷ் மற்றும் இந்தோனசியா ஆகிய நாடுகளுடன் தோல்வியினைச் சந்தித்திருந்தது. இதன் பின்னர் தொடரில் 5 தொடக்கம் 8 ஆம் இடம் வரையிலான அணிகளை தெரிவு செய்ய நடைபெற்ற போட்டிகளில் ஹொங்கொங் அணியினை 5-2 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை, உஸ்பெகிஸ்தான் அணியுடனான மோதலை 3-3 என்கிற கோல்கள் கணக்கில் சமநிலைப்படுத்தியிருந்தது.
இதேநேரம் இந்த தகுதிகாண் தொடரின் மூலம் இலங்கையுடன் சேர்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஹொக்கி தொடருக்கு ஓமான், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இந்த தகுதிகாண் தொடரில் 7 கோல்களைப் பெற்றிருந்த இலங்கையின் விபுல் வர்ணகுல தொடரில் அதிக கோல்கள் பெற்றிருந்த வீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<