கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ தயார் என்கிறது பாகிஸ்தான்

971

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தை திட்டமிட்டபடி நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடமும் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால், இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளன. இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒருநாள் தொடர் இரத்து

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி திட்டமிட்டபடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஊடக பணிப்பாளர் சமியுல் ஹசன் பர்னி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட்டுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். குறிப்பாக அவர்களுக்கு கடினமான நேரத்தில். டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இலங்கையுடன் நாங்கள் மிகவும் வலுவான உறவைக் கொண்டுள்ளோம். இந்த இரண்டு நாடுகளும் மிகவும் கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவியுள்ளன. இலங்கை கிரிக்கெட் எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் வரவேற்கிறோம். குறித்த தொடரை இலங்கையிலோ அல்லது வேறு இடத்திலோ நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், போட்டித் தொடர் குறித்த இறுதித் தீர்மானம் இலங்கை கிரிக்கெட் சபையுடையது எனவும் அவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் இணைக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் தொடர் குறித்த சுற்றுப்பயணத்தில் இருந்து இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

எனவே, இலங்கையில் சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தங்கியுள்ளது. ஒருவேளை, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அவுஸ்திரேலிய புறக்கணித்தால், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவது கேள்விக்குறியாகிவிடும்.

இதனிடையே, ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் பிசிசிஐ ஏற்கனவே இலங்கையின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளன. IPL தொடரின் முடிவில் ஆசிய கிண்ணம் இலங்கையில் நடைபெறுமா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும். அதேபோன்று, ஐக்கிய அரபு இராச்சியம் ஆசிய கிண்ணத்தை நடத்துவதற்கு ஏற்கனவே மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<