IPL தொடரின் இந்த பருவகாலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சஹாலுடன், இலங்கை அணி வீரர் வனிந்து ஹஸரங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் வனிந்து ஹஸரங்க, நேற்று (13) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்துவீசியிருந்தார்.
>> கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறும் பெட் கம்மின்ஸ்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவால்களை கொடுத்து வேகமாக ஓட்டங்களை குவித்தது. இருப்பினும், முக்கியமான தருணத்தில் பந்துவீச அழைக்கப்பட்ட வனிந்து ஹஸரங்க தன்னுடைய முதல் ஓவரில் பானுக ராஜபக்ஷவை ஆட்டமிழக்கசெய்தார்.
மீண்டும் மத்திய ஓவர்களில் சிறப்பாக ஓட்டங்களை கட்டுப்படுத்திய வனிந்து ஹஸரங்க, அணியின் 17வது ஓவரை வீசி ஜித்தேஸ் சர்மாவின் விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியில் மொத்தமாக 4 ஓவர்களை வீசிய வனிந்து ஹஸரங்க வெறும் 15 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதுமாத்திரமின்றி மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸரங்க 07.48 என்ற ஓட்டவேகத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 23 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதுமாத்திரமின்றி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சஹாலுடன் அதீகூடிய விக்கெட்டுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அதேநேரம், குறைந்த ஓட்டவேகத்தின் அடிப்படையில் ஓட்டங்களை வழங்கியுள்ள வீரர் என்ற ரீதியில் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளார்.
தங்களுடைய பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் முகமாக இன்றைய போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 209/9 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 155/9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதேவேளை தற்போது 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர் அணி, தங்களுடைய இறுதி லீக் போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெற்றால், ஓட்டவிகிதத்தின் அடிப்படையில் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேநேரம், 12 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி தங்களுடைய வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<