IPL தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா திடீர் விலகல்

Indian Premier League 2022

303
BCCI

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் இன்று (12) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு IPL தொடர் ஆரம்பமாவதற்கு முன் ரவீந்திர ஜடேஜா சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா தலைமையில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

தலைவராக செயல்படுவதால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதித்தது. நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 116 ஓட்டங்களையும், 5 விக்கெட்டுக்களையம் மட்டுமே எடுத்துள்ளார்.

இதனிடையே ஜடேஜாவுக்கு சுதந்திரமாக தலைவராகச் செயல்பட சென்னை அணி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஜடேஜா, தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதாக அறிவித்தார். இதனையடுத்து சென்னை அணியின் தலைவராக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். அப்போது பேசிய டோனி, ஜடேஜாவுக்கு தலைமைத்துவ அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று குறை கூறினார்.

தற்போது டோனியின் தலைமைத்துவத்தில் ஆடிவரும் சென்னை அணி ஒருசில வெற்றிகளை பெற்றது. இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை அணி, கடைசி 3 போட்டிகளிலும் வெற்றியீட்டினால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து பிளே-ஆப் சுற்றுற்கு தெரிவாக வாய்ப்பு உள்ளது.

எனவே கடைசி 3 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழலில், அந்த அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பிடியெடுப்கு ஒன்றை எடுக்க முயன்ற போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, 8ஆம் திகதி டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், காயம் காரணமாக IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழலில் ஜடேஜா விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, தற்போது ஜடேஜாவை சென்னை சுபர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜாவுக்கு தலைவராக சுதந்திரம் கொடுக்காமல், பதவியை பறித்துக்கொண்டதால் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிறுத்திவிட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன், ‘சமூக ஊடகங்கள், நான் எதையும் பின்பற்றுவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. நிர்வாகத் தரப்பில் இருந்து நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், எந்தப் பிரச்சனையும் இல்லை, சமூக ஊடகங்களில் என்ன இருந்தாலும், எனக்குத் தெரியாது. ஜடேஜா சென்னை அணியின் எதிர்காலத்திற்கான விடயங்களில் எப்போதும் உறுதியாக இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<