இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்

348

இலங்கை கால்பந்து சம்மேளனம், இலங்கை ஆடவர் கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக என்டி மொர்ரிஸனையும், உதவிப் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் கெய்த் ஸ்டீவன்ஸினையும் நியனம் செய்திருக்கின்றது.

கட்டாரின் Aspire Foundation உடன் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் கால்பந்து விளையாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரின் நியமனம், இலங்கை கால்பந்து சம்மேளனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

WATCH – RONALDO இருந்தும் தடுமாறும் MANCHESTER UNITED | FOOTBALL ULAGAM

மென்சஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் முன்னாள் தலைவரான என்டி மொர்ரிஸன், அந்த கால்பந்து கழகத்திற்காக 1998 தொடக்கம் 2002 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மொர்ரிஸன் ஹேடர்ஸ்பீல்ட் டவுன் (Huddersfield Town), பிளக்பூல் (Blackpool) மற்றும் பளக்பேர்ன் ரோவேர்ஸ் (Blackburn Rovers) போன்ற அணிகளையும் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்.

அத்துடன் மொர்ரிஸன், வேல்ஸ் தேசிய லீக்கில் (Welsh National League), Connah’s Quay Nomads கால்பந்து கழகத்தின் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராகவும் முகாமையாளராகவும் 2015 தொடக்கம் 2021 வரையிலான காலப்பகுதியில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆடவர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பட்ட பொஸ்னியாவினைச் சேர்ந்த அமிர் அலஜிக்கின் இடத்தினையே மொர்ரிஸன் நிரப்பவிருக்கின்றார். இலங்கை தேசிய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான அமிர் அலஜிக் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை கால்பந்து அணியுடனான உறவினை அண்மையில் நிறைவு செய்தார்.

மறுமுனையில் புதிய உதவிப் பயிற்றுவிப்பாளராக மாறியிருக்கும் கெய்த் ஸ்டீவன்ஸ் பிரீமியர் லீக்கில் (EFL) இதுவரை 557 தடவைகள் பிரசன்னமாகியிருப்பதோடு, மில்வோல் (Millwall) அணிக்காக 1980 தொடக்கம் 1999 வரையிலான காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் லீக்குகளில் பணியாற்றிய  பாரிய அனுபவத்தினை கொண்டிருக்கும் கெய்த் ஸ்டீவன்ஸ், இலங்கை கால்பந்து அணியில் வீரர்களின் திறன் விருத்திக்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொள்கின்றார் அமிர் அலர்ஜிக்

அத்துடன் இலங்கை கால்பந்து சம்மேளனம் புதிய கோல்காப்பு பயிற்சியாளர் ஒருவரினை எடுப்பதற்கும் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், புதிதாக நியமனம் பெற்றிருக்கும் பயிற்சியாளர்கள் இருவரும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவிருப்பதோடு, இலங்கை வந்ததன் பின்னர் AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக இலங்கை கால்பந்து அணியினை தயார்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், மற்றொரு வெளிநாட்டவரான மார்கொஸ் உடற்தகுதி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வரலாற்றில் இலங்கை ஆடவர் கால்பந்து அணி நான்கு வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை கொண்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதுதவிர இலங்கை கால்பந்து அணியில் திறமையினை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகளில் ஆடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவிருப்பதோடு, அவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டாரின் Apsire Academy இல் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<