இந்த இலங்கை வீரர்களை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கலாம் – மஹேல ஜயவர்தன

1078

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணத்தில் இலங்கை எதிர்பார்ப்புமிக்க ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, அதன் பின்னர் தற்போது நடைபெற்று வருகின்ற IPL தொடரிலும் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணத்திலும் இலங்கை சாதிக்கும் என இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்சியாளரான மஹேல ஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

>>இலங்கைக்கெதிரான முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் சகீப்

2021ஆம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்றில் இலகுவாக கடந்த இலங்கை அணி அதன் பின்னர் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இலகு வெற்றிகளை பதிவு செய்திருந்தது. அத்துடன் அந்த உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மோதலிலும் இறுதி வரை இலங்கை நெருக்கடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் பல இளம் வீரர்கள் திறமையினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணத்திலக்க போன்ற துடுப்பாட்டவீரர்களின் வருகை இலங்கை அணியினை 2022ஆம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய மண்ணில் பலப்படுத்தும் என நம்புவதாக மஹேல ஜயவர்தன குறிப்பிட்டிருக்கின்றார்.

கடந்த உலகக் கிண்ணத்தில் ஆடிய இளம் (இலங்கை) அணி நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, இந்த இளம் வீரர்கள் தொகுதி தாக்குதலான (Attacking) ஆட்டத்தினை காட்டியதாக நான் நம்புகின்றேன். இதேவேளை குறிப்பிட்ட (உலகக் கிண்ணம் நடைபெற்ற) காலப்பகுதியில் நீக்கம் செய்யப்பட்ட வீரர்களும் அணியில் இணைகின்றார்கள்.”  என சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டிருந்தார்.

பானுக்க ராஜபக்ஷ முன்வரிசைக்காக இருக்கின்றார். பெதும் நிஸ்ஸங்கவிற்கும் சிறந்த T20I உலகக் கிண்ணம் ஒன்று அமைந்திருந்தது. சரித் அசலன்கவும் பிரகாசித்திருந்தார். எனவே, எம்மிடம் மிகவும் தாக்குதலான துடுப்பாட்டத்தொகுதியொன்று இருக்கின்றது. இதில் பல இளம் வீரர்கள் இரண்டாவது உலகக் கிண்ணத்தினை எதிர்பார்த்திருப்பதோடு, அந்த வீரர்களே இலங்கையினை முன்னோக்கி கொண்டு செல்பவர்களாகவும் இருக்கின்றனர்.

அத்துடன் நாங்கள் சிறந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம்

அத்துடன் தற்போது நடைபெற்றுவருகின்ற IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டுவரும் மஹேல ஜயவர்தன IPL போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்திவருகின்ற இலங்கை வீரர்கள் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதில் நடைபெறப்போகும் T20I உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் வீரர்களில் ஒருவராக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பிரகாசித்து வருகின்ற வனிந்து ஹஸரங்க இருப்பார் என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டிருக்கின்றார்.

”வனிந்து ஹஸரங்க (T20I உலகக் கிண்ணத்தில்) முக்கிய வீரராக இருப்பார். அவர் தற்போதைய கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் காணப்படுகின்ற சிறந்த சகலதுறைவீரர்களில் ஒருவராக உள்ளார்.”

”துஷ்மன்த சமீர மிகவும் வெற்றிகரமான ஒரு பந்துவீச்சாளராக மாறியிருக்கின்றார். இலங்கைக்கு (உலகக் கிண்ணத்தில்) பந்துவீச்சுத்துறையானது முக்கியமானதாக இருக்கும், எனவே துஷ்மன்தவும், வனிந்துவும் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். அத்துடன் சென்னை அணிக்காக ஆடிவரும் மஹீஷ் தீக்ஷனவும் இலங்கைக்கு இருக்கும் மற்றுமொரு சொத்து, எனவே இந்த மூன்று வீரர்களும் இலங்கைக்கு முக்கியமானவர்களாக காணப்படுவர்.”

ஒட்டுமொத்தமாக, IPL போட்டிகளிலும் ஒரு சில வீரர்கள் திறமை காட்டுகின்றனர், இங்கே அனுபவத்தினை பெறும் போது, எங்களுக்காக அவுஸ்திரேலிய மண்ணில் சிறந்த அனுபவம் கொண்ட ஒரு தொகுதி களமிறங்கும்“ என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டிருக்கின்றார்.

>>மும்பை அணியிலிருந்து வெளியேறும் சூர்யகுமார் யாதவ்

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தினை வெல்லுமா என்ற கேள்விக்கும் பதிலளித்திருந்த மஹேல ஜயவர்தன, சம பலத்துடனான அணிகள் இருப்பதனால் அது கடினமாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இன்னும் மைதான நிலைமைகளை அதிகம் தெரிந்து வைத்துள்ள உலகக் கிண்ணம் நடைபெறும் நாடான அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் T20I உலகக் கிண்ணத்தில் அதிக போட்டித்தன்மையாக காணப்படும் எனவும் மஹேல ஜயவர்தன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<