கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மிகச்சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வளர்ந்துவரும் அணியின் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கான பயிற்சிப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (07) நிறைவுக்குவந்தது.
>>இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக 400 ஓட்டங்களை குவித்த கெண்ட் அணி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கெண்ட் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 418 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில், டெரன் ஸ்டீவன்ஸ் 168 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லிண்டே 107 ஓட்டங்களையும் அதிகட்சமாக பெற்றுக்கொண்டனர்.
மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த கெண்ட் அணிசார்பாக, விக்கெட் காப்பாளர் பில்லி மீட் மற்றுமொரு சதத்தை பதிவுசெய்து அணிக்கு பலம் கொடுக்க, மறுபக்கம் ஹெரி பொட்மோர் அரைச்சதம் கடந்தார். பில்லி மீட் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற, ஹெரி பெட்மோர் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர்களின் இந்த துடுப்பாட்ட பங்களிப்பின் உதவியுடன் கெண்ட் கிரிக்கெட் கழகம் 137 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் பந்துவீச்சில் உதித் மதுசான், யசிரு ரொட்ரிகோ, தனன்ஜய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கெண்ட் அணி முதல் இன்னிங்ஸில் குவித்திருந்த மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியை பொருத்தவரை, அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தங்களுடைய முதல் விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இழந்திருந்தாலும், நிசான் மதுஷ்க மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டநேரம் நிறைவுவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் 187 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், இலங்கை அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நிசான் மதுஷ்க தன்னுடைய சதத்தை பதிவுசெய்து 120 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 18 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களை பெற, மறுமுனையில் லசித் குரூஸ்புள்ளே 109 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். கெண்ட் அணியின் பந்துவீச்சில் ஹெரி பொட்மோர் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதேவேளை, கெண்ட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி இன்னும் 394 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
கெண்ட் கிரிக்கெட் கழகம் – 595/8d (137), டெரன் ஸ்டீவன்ஸ் 168, ஜோர்ஜ் லிண்டே 107, தனன்ஜய லக்ஷான் 106/2, உதித் மதுசான் 109/2, யசிரு ரொட்ரிகோ 90/2
இலங்கை பதினொருவர் – 201/1 (41), நிசான் மதுஷ்க 104*, லசித் குரூஸ்புள்ளே 86*, ஹெரி பெட்மோர் 41/1
முடிவு – கெண்ட் அணி 394 ஓட்டங்களால் முன்னிலை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<