பெயார்பிரேக் (FairBreak) T20 தொடரின் ஆறாவது போட்டியில் இன்று (07) சமரி அத்தபத்துவின் அதிரடி வீணாக பேல்கோன்ஸ் வுமன் (Falcons Women) அணி, ஸ்பிரிட் வுமன் (Spirit Women) அணியிடம் 27 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியிருக்கின்றது.
அத்துடன் இந்த தோல்வி பெயார்பிரேக் T20 தொடரில், பேல்கோன்ஸ் வுமன் அணிக்கு முதல் தோல்வியாகவும் மாறியிருக்கின்றது.
>>துபாயில் அதிரடி காட்டிய சமரி அத்தபத்து
பாலின சமத்துவத்தினை வலியுறுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட பெயார்பிரேக் மகளிர் T20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டியில் இன்று தொடரில் எந்தவொரு தோல்வியினையும் சந்திக்காத சமரி அத்தபத்துவின் பேல்கோன்ஸ் வுமன் அணியும், ஸ்பிரிட் வுமன் அணியும் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பேல்கோன்ஸ், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஸ்பிரிட் அணிக்கு வழங்கியது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்பிரிட் அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்கள் பெற்றது.
ஸ்பிரிட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சோபியா டங்லி 30 பந்துகளுக்கு 9 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், பேல்கோன்ஸ் அணியின் பந்துவீச்சிற்காக சமரி அத்தபத்து, அன்ஜூ குருங், மற்றும் கய்யா அருயா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பேல்கோன்ஸ் அணிக்கு சமரி அத்தபத்து அதிரடியான துடுப்பாட்டம் மூலம் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார்.
எனினும் ஏனைய வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் சொதப்ப பேல்கோன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
பேல்கோன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மறுமுனையில் பேல்கோன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சிசூகா மியாஜி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், சாயா முகால் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
ஸ்பிரிட் அணி – 147/3 (20) சோபியா டங்லி 51(30), சமரி அத்தபத்து 17/1(4)
பேல்கோன்ஸ் அணி – 120/9 (20) சமரி அத்தபத்து 42(28), சிசூகா மியாஜி 18/4(4), சாயா முகால் 13/2(3)
முடிவு – ஸ்பிரிட் வுமன் அணி 27 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<