கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த டேவிட் வோர்னர்

Indian Premier League 2022

233

T20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து டேவிட் வோர்னர் முதலிடம் பிடித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டேவிட் வோர்னர், ரோவ்மன் பவல் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் டெல்லி கெபிடல்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைக் குவித்தது. டேவிட் வோர்னர் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களையும், ரோவ்மன் பவல் 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.

இந்த நிலையில், நேற்றைய போட்டியில் டேவிட் வோர்னர் T20 அரங்கில் 89ஆவது அரைச்சதம் கடந்தார். இதன்மூலம் T20 போட்டிகளில் (சர்வதேச T20 மற்றும் T20 லீக் தொடர்கள்) அதிக அரைச்சதங்கள் அடித்த வீரராக புதிய சாதனை படைத்தார்.

இவருக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 88 அரைச்சதங்களை அடித்து இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி 77 அரைச்சதம் அடித்து 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், IPL அரங்கில் தனது 54ஆவது அரைச்சதத்தை வோர்னர் பூர்த்தி செய்தார். இதன்மூலம் IPL போட்டிகளில் அதிக அரைச்சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடங்களில் ஷிகர் தவான் (47), விராத் கோஹ்லி (43) ஆகிய இருவரும் உள்ளனர்.

அதுமாத்திரமின்றி, எய்டன் மார்க்ரம் வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய வோர்னர், ஒட்டுமொத்த T20 அரங்கில் தனது 400ஆவது சிக்ஸரை பதிவு செய்தார். 321 போட்டியில் இம்மைல்கல்லை எட்டிய இவர், இந்த இலக்கை அடைந்த 10ஆவது வீரரானார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (1056 சிக்ஸர்) உள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<