கஜன், கவிதர்ஷனின் பிரகாசிப்புகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிய யாழ். மத்தி!

U19 Schools Cricket 2022

337
U19 Schools Cricket 2022

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3 50 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடரின் காலிறுதியில், இப்பாகமுவ மத்தியக் கல்லூரியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய யாழ். மத்தியக் கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

அனுராதபுரம் டிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்தியக் கல்லூரி அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதும், ஆனந்தன் கஜன் மற்றும் விநாயகசெல்வம் கவிதர்ஷன் ஆகியோரின் 6வது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துடன் 49.5 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களை குவித்தது.

>> மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் இளம் பந்துவீச்சாளர்

அற்புதமான துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்திய ஆனந்தன் கஜன் 122 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை குவித்தார். அதுமாத்திரமின்றி விநாயகசெல்வம் கவிதர்ஷன் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், கஜனுடன் இணைந்து 77 ஓட்டங்களை பகிர்வதற்கு காரணமாக இருந்தார்.

யாழ். மத்தியக் கல்லூரி அணி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சந்தர்ப்பத்தில் கஜன் மற்றும் கவிதர்ஷன் ஆகியோர் மேற்குறித்த மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்திருந்தனர். இப்பாகமுவ மத்திய கல்லூரியை பொருத்தவரை லக்ஷான் கமகே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இப்பாகமுவ மத்தியக் கல்லூரி முதல் 2 விக்கெட்டுகளை 20 ஓட்டங்களுக்கு விட்டுக்கொடுத்தாலும், ஹமிந்து பத்மிக மற்றும் பிரபுத்த பிரேமலால் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுகொடுத்தனர்.

இவர்கள் மூன்றாவது விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர்ந்திருக்க, யாழ். மத்தியக் கல்லூரிக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனினும், கவிதர்ஷன் பந்துவீச்சால் மிரட்ட சமிந்து பத்மிக்க 35 ஓட்டங்களுடனும், பிரபுத்த பிரேமலால் 67 ஓட்டங்களுடனும் களத்திலிருந்து வெளியேறினர்.

யாழ். மத்தியக் கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த மேற்குறித்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பின்னர், யாழ். மத்தியக் கல்லூரியின் பக்கம் வெற்றி வாய்ப்பு திரும்பியது. இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் கவிஷ்க புஷ்பகுமார 18 ஓட்டங்களையும், பசிந்து பிலிபன 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

யாழ். மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சை பொருத்தவரை அற்புதமாக பந்துவீசிய கவிதர்ஷன் 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த, நிஷாந்தன் அஜய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, இப்பாகமுவ மத்தியக் கல்லூரி அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றுள்ள யாழ். மத்தியக் கல்லூரி அணி தங்களின் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 210/10 (49.5), கஜன் 112, நியூட்டன் 14, சன்சயன் 14, லக்ஷான் கமகே 17/2

இப்பாகமுவ மத்தியக் கல்லூரி – 161/10 (44.5), பிரபுத்த 67, பத்மிக 35, கவிதர்ஷன் 27/6, அஜய் 32/2

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<