FairBreak T20 தொடரில் களமிறங்கும் சமரி அத்தபத்து

FairBreak Invitational 2022

227

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து நடைபெறவுள்ள FairBreak T20 தொடரில் Falcorns அணிக்காக விளையாடவுள்ளார்.

32 வயதான சமரி அத்தபத்து இலங்கை சார்பில் இதுவரை 89 T20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், உலகின் முன்னணி T20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவராவார்.

இவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற மகளிருக்கான பிக்பேஷ் T20 லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடியதுடன், இந்தியாவில் IPL தொடரின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற மகளிருக்கான T20 லீக் தொடரில் சுபர் நோவாஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

எனவே, மகளிருக்கான கிரிக்கெட்டில் அதிரடி துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற சமரி அத்தபத்துவின் அனுபவம், Falcorns அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, சமரி அத்தபத்து விளையாடவுள்ள Falcorns அணியில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ், இங்கிலாந்தின் டேனில்லி வியாட் மற்றும் தென்னாபிரிக்காவின் மரிசான் கேப் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரராங்கனைகள் இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மேலும் ஒரு வீராங்கனை FairBreak T20 தொடரில் விளையாடவுள்ளார். இலங்கையின் 36 வயதான சகலதுறை வீராங்கனை உதேஷிகா பிரபோதனி The Warriors அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FairBreak Invitational T20 Tournament 2022 கிரிக்கெட் தொடரானது ஐசிசி இன்  அனுமதியைப் பெற்றுக்கொண்ட போட்டிகளில் ஒன்றாகும். அத்துடன், இந்த கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபை மற்றும் ஹொங்கொங் கிரிக்கெட் சபை ஆகியன இணைந்து நடத்தவுள்ளது.

இதில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, ஹொங்காங், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, பங்களாதேஷ், பூட்டான், அமெரிக்கா, சுவீடன், அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆர்ஜென்டீனா, நமீபியா, பொட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை இந்தப் போட்டித் தொடர் துபாயில் நடைபெறும். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 19 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<