இலங்கை டெஸ்ட் தொடருக்காக நாடு திரும்பினார் சகிப்

Sri Lanka Tour of Bangladesh 2022

499

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல் ஹசன், டாக்கா பிரீமியர் லீக் தொடரில் லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்ச் (Legends of Rupganj) அணியில் இணைந்துகொண்டுள்ளார்.

மே 15ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சகிப் அல் ஹசன் விளையாடுவார் என்று லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்ச் அணியின் உரிமையாளர் லுத்புர் ரஹ்மான் பாதால் cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவில் இருந்து சகிப் இன்று (20) நாடு திரும்புகிறார். எனவே, அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார். அவருக்கும், எனக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய தொடர்பு காரணமாகத் தான் அவர் எமது அணியில் விளையாட விருப்பம் தெரிவித்தார். அதேபோல, எதிர்வரும் காலங்களில் நடைபெறுகின்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்குப் பயிற்சி தேவை என்று அவர் கூறினார்.

முன்னதாக சகிப் அல் ஹசன் முகமதின் ஸ்போர்ட்டிங் அணியில் (Mohammedan Sporting Club) இடம்பெற்றார். எனினும், அந்த அணி சுபர் சிக்ஸ் சுற்றுக்காகத் தெரிவாகிய முதல் ஆறு இடங்களுக்குள் இடம்பெற தவறியது. பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்ச் அணியில் இணைந்தார்.

இதேவேளை, கடந்த மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சகிப் எந்தவொரு சர்வதேசப்

போட்டியிலும் விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இதற்கிடையில், பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்களான முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மெஹெடி ஹசன் ஆகியோர் டாக்கா பிரீமியர் லீக்கில் ஷேக் ஜமால் தன்மோண்டி அணியில் (Sheikh Jamal Dhanmondi) இணைந்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<