டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் தனன்ஞய டி சில்வா

Dhaka Premier Division Cricket League 2022

288

பங்களாதேஷில் நடைபெறுகின்ற டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்கில் அபஹானி லிமிடெட் (Abahani Limited) அணிக்காக விளையாடுவதற்காக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனன்ஞய டி சில்வா இன்று (17) பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகிய டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்கின் முதல்கட்ட சுற்றுப் போட்டிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. 11 அணிகள் பங்குகொண்டுள்ள இந்தப் போட்டித் தொடரின் முதல் சுற்றின் முடிவில், அபஹானி லிமிடெட் அணி, 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று போனஸ் புள்ளியுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இதன்படி, ஷெய்க் ஜமால் தன்மோண்டி கழகம், அபஹானி லிமிடெட், லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்ச், பிரைம் பேங்க் கிரிக்கெட் கழகம், ரூப்கஞ்ச் டைகர்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் காஸி குரூப் கிரிக்கெட்டர்ஸ் ஆகியவை சுபர் லீக் சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் ஆறு அணிகளில் அடங்கும்.

எனவே, லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொள்ளும்.

இதனிடையே, இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள மொசாடிக் ஹொசைன் தலைமையிலான அபஹானி லிமிடெட் அணிக்காக சுப்பர் லீக் சுற்றில் ஐந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இலங்கை வீரர் தனன்ஞய டி சில்வா பெற்றுள்ளார்.

இதன் மூலம் இம்முறை டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்கில் விளையாடும் 2 ஆவது இலங்கை வீரராக அவர் இடம்பிடித்தார்.

முன்னதாக, குசல் மெண்டிஸ் மொஹமதின் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இதில் முதல் சுற்று இறுதிப் போட்டியில் லெஜண்ட்ஸ் ஆஃப் ரூப்கஞ்ச் அணிக்கு எதிராக சதமடித்து அசத்திய குசல் மெண்டிஸ், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அத்துடன், குறித்த போட்டியில் குசல் மெண்டிஸ் விளையாடிய அணி வெற்றியையும் பதிவுசெய்தது.

இதேவேளை, அடுத்த மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தேச இலங்கை டெஸ்ட் குழாத்தில் குசல் மெண்டிஸும், தனன்ஞய டி சில்வாவும் இடம்பெற்றுள்ளனர்.

எனவே பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு முன் ஆயத்தமாக குறித்த இரண்டு வீரர்களுக்கும் டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இது இவ்வாறிருக்க, டாக்கா பிரீமியர் லீக்கில் இருந்து நேரடியாக பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியுடன் குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகிய இருவரும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<