IPL வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய வீரர்கள்!

Indian Premier League

415

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) இந்த பருவகாலத்தில் துடுப்பாட்ட வீரர்கள் சரமாரியாக ஓட்டங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் மேற்கு பகுதியில் (மும்பை) உள்ள மைதானங்கள் அதிகமாக துடுப்பாட்ட வீரர்களுக்கான சொர்க்க பூமியாக திகழ்கின்றன.

அந்தளவில் துடுப்பாட்ட வீரர்களுக்கான சொர்க்க பூமியாக விளங்கும் இந்த ஆடுகளங்கள், துடுப்பாட்ட வீரர்களுக்கு மிக மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கித்தந்துள்ளதுடன், பந்துவீச்சாளர்களுக்கு மறக்க முடியாத சோகத்தையும் கொடுத்திருக்கின்றது என்பதனை மறுக்கமுடியாது.

>>2022 IPL தொடரில் களமிறங்கும் இளம் வீரர்கள்

அவ்வாறான பந்துவீச்சாளர்களின் சோகமான தருணங்களில் ஒன்றான, IPL வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 5 பந்துவீச்சாளர்கள் தொடர்பில் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பிரசாந்த் பரமேஷ்வரன் – எதிர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 2011

IPL தொடரில் முதன்முறையாக 10 அணிகளின் பங்கேற்பில் 2011ம் ஆண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் அணி விளையாடியது.

தொடரின் 50வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் அணி 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள, 13.1 ஓவர்களில் பெங்களூர் அணி வெற்றியிலக்கை கடந்து அதிரடி காட்டியது.

இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த்  பரமேஷ்வரன் அணியின் மூன்றாவது ஓவரை வீச அழைக்கப்பட்டார். துடுப்பாட்ட முனையில் இருந்த கிரிஸ் கெயில், பிரசாந்த்தின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசியதுடன், இரண்டாவதாக வீசப்பட்ட நோ போல் பந்துக்கும் சிக்ஸரை விளாசினார்.

அடுத்த இரண்டு பந்துகளையும் பௌண்டரிக்கு விரட்டிய கிரிஸ் கெயில், மீண்டும் 2 சிக்ஸர்களை தனக்கே உரிய பாணியில் விளாசித்தள்ளினார். முதல் 5 பந்துகளுக்கும் 33 ஓட்டங்கள் விளாசப்பட, இறுதி பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டு, இன்சைட் எட்ஜ் (Inside edge) மூலம் விக்கெட் காப்பாளரின் பின்னால் பௌண்டரிக்கு சென்றது.

இதன்மூலம் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பிரசாந்த் IPL போட்டிகளில் ஒரு ஓவருக்கு அதிகூடிய ஓட்டங்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை தன்வசப்படுத்திக்கொண்டார்.

ஹர்ஷல் பட்டேல் – எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – 2021

கடந்த ஆண்டு நடைபெற்ற (2021) IPL தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல். வேகப் பந்துவீச்சாளரான இவர் தன்னுடைய ஸ்லோவர் பந்துகள் மூலமாக விக்கெட்டுகளை குவித்தார்.

இதன் பலனாக பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய இவர், 32 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். குறிப்பாக ஒரு IPL  பருவகாலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை டுவைன் பிராவோவுடன் பகிர்ந்துக்கொண்டார்.

இப்படி, அற்புதமான திறமையினை வெளிப்படுத்திய ஹர்ஷல் பட்டேலுக்கு, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டி, அவரது பந்துவீச்சின் கறுப்பு புள்ளியாக மாறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தன்னுடைய முதல் 3 ஓவர்களிலும் 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்த ஹர்ஷல் பட்டேல் அணியின் இறுதி ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

துடுப்பாட்ட முனையில் இருந்த ரவீந்திர ஜடஜோ, ஹர்ஷல் பட்டேலுக்கு எதிராக அற்புதமான ஆட்டமொன்றை ஆடத்தொடங்கினார். ஹர்ஷலின் முதல் 3 பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினார் ஜடேஜா. இதில், 3வது பந்து நோ போல் பந்தாக மாற, பிரீ-ஹிட் (Free-Hit) பந்துக்கும் சிக்ஸரை விளாசினார். எனவே, தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

ரசிகர்கள் மத்தியில் ஜடேஜா ஆறு சிக்ஸர்களை விளாசி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், அடுத்த பந்தை ஹர்ஷல் சிறப்பாக வீச 2 ஓட்டங்கள் பெறப்பட்டன. எனினும், 5வது பந்தை மீண்டும் சிக்ஸருக்கு விளாசிய ஜடேஜா, இறுதி பந்தில் பௌண்டரி அடித்தார்.

எனவே, கடந்த ஆண்டின் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை நிறைவுசெய்த ஹர்ஷல் பட்டேலுக்கு, ஒரு ஓவரில் 37 ஓட்டங்களை கொடுத்து அதிகூடிய ஓட்டங்களை வழங்கியவர் என்ற மோசமான சாதனையும் சேர்ந்துக்கொண்டது. இருப்பினும், அவருடைய உண்மையான திறமையை கவனத்தில் கொண்டு, பெங்களூர் அணி இந்த ஆண்டு அவரை 10.75 கோடிக்கு மீண்டும் அணிக்குள் வாங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

டேனியல் சேம்ஸ் – எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2022

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று இந்த ஆண்டு நடைபெற்றுவரும் IPL தொடரில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை சரமாரியாக குவித்து வருகின்றனர்.

அந்தவரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவரும் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் டேனியல் சேம்ஸ், தன்னுடைய சொந்த நாட்டு வீரரான பெட் கம்மின்ஸின் பாரபட்சம் பார்க்காத துடுப்பாட்டத்தின் காரணமாக ஒரே ஓவரில் 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனையை தன்வசப்படுத்திக்கொண்டார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  இந்த பருவகாலத்தில் தங்களுடைய முதல் போட்டியில் விளையாட, பெட் கம்மின்ஸும் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார்.

கொல்கத்தா அணியின் அன்ரே ரசல் வரை துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழக்க, 162 என்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்திருந்த வெற்றியிலக்கை அடைய போராட்டம் காண்பித்தது கொல்கத்தா அணி.

ஆனால், வந்த வேகத்தில் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெட் கம்மின்ஸ் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளை விளாசித்தள்ளினார்.

கொல்கத்தா அணிக்கு 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 16வது ஓவரை வீச அழைக்கப்பட்டார் டேனியல் சேம்ஸ். இறுதி ஓவர்வரை காத்திருக்காத பெட் கம்மின்ஸ், டேனியல் சேம்ஸின் ஒரே ஓவரில் 4 சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகளை விளாசினார். அதேநேரம், 5வது பந்தை சேம்ஸ் நோ போல் பந்தாக வீச குறிப்பிட்ட பந்தில் 2 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, சேம்ஸின் ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் விளாசப்பட்டன. IPL போட்டிகளை பொருத்தவரை, ஒரு ஓவருக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியது.

ரவி பொப்பாரா – எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2010

மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் பல பந்துவீச்சாளர்களை தன்னுடைய வாழ்வில் பதம்பார்த்துள்ளார். பிரசாந்த் பரமேஷ்வரனின் பந்து ஓவரை 2011ம் ஆண்டு மிரட்டியிருந்த போதும், அதற்கு முந்தை வருடத்தில் ரவி பொப்பாராவுக்கு அதிர்ச்சிக்கொடுத்திருந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பொப்பாரா அணியின் 13வது ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்டார். முதல் பந்தில் மனோஜ் திவாரி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று, துடுப்பாட்ட முனையை கெயிலுக்கு அளித்தார்.

இரண்டாவது பந்தில் மிட்விக்கட், மூன்றாவது பந்தில் லோங்-ஒன், நான்காவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர், ஐந்தாவது பந்தில் மீண்டும் லோங்-ஒன் என 4 சிக்ஸர்களை விளாசினார் கிரிஸ் கெயில். முதல் 5 பந்துகளில் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கப்பட்டன.

கிரிஸ் கெயிலுக்கு எவ்வாறு பந்துவீசுவது என தடுமாறிய பொப்பாரா, இறுதி பந்தை வைட் பந்தாக வீச, பந்து பௌண்டரி எல்லையையும் தொட்டது. மீண்டும் ஒரு வைட் பந்தை வீச, மேலும் ஒரு ஓட்டம் உதிரியாக பெறப்பட்டது. 5 பந்துகளில் 32 ஓட்டங்களை கொடுத்த பொப்பாராவின் இறுதி பந்தை மனோஜ் திவாரி எதிர்கொள்ள அவரால் ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனவே, தன்னுடைய ஒரே ஓவரில் 33 ஓட்டங்களை கொடுத்து மோசமான சாதனையை பொப்பாரா தனதாக்கிக்கொண்டார். எனினும், இதற்கு அடுத்த வருடத்தில் மீண்டும் சீறிப்பாய்ந்த கெயில், பிரசாந்தின் பந்து ஓவரில் 37 ஓட்டங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பர்விந்தர் அவானா – எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – 2014

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா ஆடிய அற்புதமான இன்னிங்ஸ்களில் ஒன்று 2014ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பதிவாகியது.

பஞ்சாப் அணி விரேந்திர செவாக்கின் சதத்தின் உதவியுடன் (122) 227 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்க, சென்னை அணி பவர்-பிளே ஓவர்களில் 100 ஓட்டங்களை விளாசியது. இதில், சுரேஷ் ரெய்னா மாத்திரம் 87 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், பவர்-பிளேயில் ரெய்னாவின் ஓட்டக்குவிப்பு சாதனை பதிவாகியதுடன் மறுபக்கம் இந்திய மித வேகப் பந்துவீச்சாளரான பவிந்தர் அவானாவுக்கான மறக்கமுடியாத போட்டியாகவும் அமைந்திருந்தது.

பவிந்தர் அவானா அணியின் ஆறாவது ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்ட நிலையில், அவருடைய அனைத்து பந்துகளுக்கும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை சுரேஷ் ரெய்னா விளாசினார். முதல் 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசிய ரெய்னா, அடுத்தடுத்து 5 பௌண்டரிகளை விளாசினார். இதில், 5வது பந்து நோ போல் பந்தாக கணிக்கப்பட மொத்தமாக 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் பவிந்தர் அவானா. இவருடைய இந்த பந்துவீச்சு பிரதியானது, IPL தொடரில் ஒரு ஓவருக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<