தீக்ஷனவின் அசத்தல் பந்துவீச்சோடு 2022 IPL இல் சென்னை அணிக்கு முதல் வெற்றி

308
Chennai Super Kings registered first win

2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் 22ஆவது லீக் போட்டியில் இலங்கையின் சுழல்வீரர் மஹீஷ் தீக்ஷனவின் அபார பந்துவீச்சோடு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை வீழ்த்தியிருக்கும், சென்னை சுபர் கிங்ஸ் அணி தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> IPL வரலாற்றில் ஆதிக்கத்தை காட்டும் KKR துடுப்பாட்ட வீரர்கள்!

இரு அணிகளுக்குமிடையிலான இந்தப் போட்டி மும்பை நகரில் ஆரம்பமானது. இப் போட்டியில் தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்து 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்த சென்னை சுபர் கிங்ஸ் அணி, மூன்று வெற்றிகளுடன் தொடரில் முன்னேறியிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை எதிர்கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பெப் டூ பிளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி ரொபின் உத்தப்பா மற்றும் சிவம் டூபே ஆகியோரின் அபார ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்கள் குவித்துக் கொண்டது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற சிவம் டூபே வெறும் 46 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், ரொபின் உத்தப்பா 50 பந்துகளுக்கு 9 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 217 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆரம்பவீரர்களாக களம் வந்த பெப் டூ பிளேசிஸ் (8) மற்றும் அனுஜ் ராவட் (12) ஆகியோர், மகீஷ் தீக்ஷனவின் அபார பந்துவீச்சு காரணமாக ஆட்டமிழந்து ஏமாற்றம் தர அவ்வணி தடுமாற்றத்தினை சந்திக்க தொடங்கியிருந்தது. பின்னர், எதிர்பார்ப்பு வீரர்களாக கருதப்பட்ட விராட் கோலி மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோரது விக்கெட்டுக்களும் பறிபோனது. இதில் விராட் கோலி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, மெக்ஸ்வெல் சிறு அதிரடி ஒன்றினைக் காண்பித்த நிலையில் 11 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை எடுத்து ஓய்வறை நடந்திருந்தார்.

>> 2024 T20 உலகக் கிண்ணத்துக்கு எப்படி தகுதிபெறுவது?

இந்நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக வெற்றி இலக்கினை நோக்கிய பயணத்தில் சஹ்பாஸ் அஹ்மட் மற்றும் சுயாஸ் பிரபுதேசாய் ஆகியோர் நம்பிக்கை தந்த போதும், மீண்டும் பந்துவீச்சில் அசத்திய மகீஷ் தீக்ஷன இந்த இருவரது விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார். இந்த வீரர்களில், சஹ்பாஸ் அஹ்மட் 27 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்திருக்க, சுயாஸ் பிரபுதேசாய் 18 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் தினேஷ் கார்திக்கின் அதிரடியும் வீணாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, IPL போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்ய, ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுபர் கிங்ஸ் – 216/4 (20) சிவம் டூபே 95*, ரொபின் உத்தப்பா 88, வனிந்து ஹஸரங்க 35/2

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 193/9 (20) சஹ்பாஸ் அஹ்மட் 41(27), மகீஷ் தீக்ஷன 33/4, ரவிந்திர ஜடேஜா 39/3

முடிவு – சென்னை சுபர் கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<