துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் தரமான பிரகாசிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்துவதன் காரணமாகவே இன்றுவரையும் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் IPL தொடருக்கான வரவேற்பு மேலோங்கியுள்ளன.
அந்தவகையில் இந்த பிரகாசிப்புகளில் துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு துடுப்பாட்ட வீரர்களின் முக்கியமான IPL சாதனையொன்றினை, அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் பெட் கம்மின்ஸ் சமனிலைப்படுத்தியுள்ளார்.
IPL போட்டிகளில் வேகமான அரைச்சதத்தை விளாசிய சாதனையை இதுவரையும் கே.எல்.ராஹுல் மாத்திரம் வைத்திருந்த நிலையில், இதில் தன்னுடைய பெயரையும் கம்மின்ஸ் இணைத்துக்கொண்டார். இப்படி இருக்கையில், IPL வரலாற்றில் இதுவரை வேகமாக பெறப்பட்ட நான்கு அரைச்சதங்கள் தொடர்பில் பார்க்கலாம்.
>> RCB அணிக்காக மீண்டும் அற்புதமாக பந்துவீசிய ஹஸரங்க
கே.எல்.ராஹுல் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ் 2018
IPL போட்டிகளை பொருத்தவரை தன்னுடைய அறிமுக நாட்களிலிருந்து எந்த பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு இலகுவாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர் கே.எல்.ராஹுல்.
ஆனால், இவருடைய ஓட்டவேகம் கடந்த இரண்டு பருவகாலங்களாக கேள்விக்குறியதாக மாறியிருந்தது. எனினும், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஹூல் அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி, வெறும் 14 பந்துகளில் அரைச்சதம் கடந்திருந்தார்.
பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 167 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணிக்காக மிக அபாரமான ஆரம்பத்தை ராஹுல் பெற்றுக்கொடுத்தார்.
டிரெண்ட் போல்ட் வீசிய முதலாவது ஓவரில் 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராஹுல், மொஹமட் சமி வீசிய இரண்டாவது ஓவரில் 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மூன்றாவது ஓவரை வீசுவதற்காக அனுபவ சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா அழைக்கப்பட, அவரின் ஓவரின் முதல் 5 பந்துகளிலும் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளை விளாசி தன்னுடைய அரைச்சதத்தை வெறும் 14 பந்துகளில் கடந்து சாதனை படைத்தார் ராஹுல்.
ராஹுல் மொத்தமாக 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளை விளாசியிருந்தார். இதன்மூலம் 2014ம் ஆண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக யூசுப் பதான் விளாசிய 15 பந்துகள் அரைச்சத சாதனையை ராஹுல் முறியடித்தார்.
பெட் கம்மின்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் 2017
ஒரு தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரின் சாதனையை சகலதுறை வீரரான பெட் கம்மின்ஸ் இந்த ஆண்டு IPL தொடரில் சமப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய பெட் கம்மின்ஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கொல்கத்தா அணி 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆடும் போது, விக்கெட்டுகளை பறிகொடுத்து போட்டியிலிருந்து முழுமையாக பின்னடைவை சந்தித்திருந்த போது, களமிறங்கிய பெட் கம்மின்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்திருந்தார்.
டைமால் மில்ஸ் வீசிய 14வது ஓவரில் சிக்ஸர் மற்றும் பௌண்டரியை விளாசி 11 ஓட்டங்களுடன் ஆரம்பித்த கம்மின்ஸ், பும்ராவின் ஓவருக்கும் இதே போன்று 11 ஓட்டங்களை குவித்தார். 8 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், தன்னுடைய சொந்த நாட்டு வீரரான டேனியல் சேம்ஸின் ஓவரை எதிர்கொண்டு, முதல் நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசினார். இதன் மூலம் 12 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்தார்.
IPL தொடரில் வேகமான அரைச்சதத்தை கடக்க வாய்ப்பிருந்த நிலையில், தான் எதிர்கொண்ட 13வது பந்தை சிக்ஸருக்கு விரட்ட முற்பட்டார். கிட்டத்தட்ட பௌண்டரி எல்லையை கடந்து பந்துசெல்ல அற்புதமான களத்தடுப்பின் மூலம் சூர்யகுமார் யாதவ் 2 ஓட்டங்களை மாத்திரமே வழங்கினார். இந்த பந்து நோ-போல் பந்தாக இருந்தாலும், பந்து கணக்கிடப்பட்டது. எனவே, கம்மின்ஸ் 13 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றார்.
பின்னர் அடுத்த பந்தை பௌண்டரிக்கு அனுப்பிய பெட் கம்மின்ஸ், 2018ம் ஆண்டு கே.எல்.ராஹுல் படைத்த 14 பந்துகள் அரைச்சதத்தை சமப்படுத்தினார். அதுமாத்திரமின்றி அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து 16 ஓவர்களில் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். அத்துடன், இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யூசுப் பதான் எதிர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 2014
யூசுப் பதான் இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர். எந்தவொரு போட்டியையும் தான் களத்திலிருக்கும் போது மாற்றக்கூடியவர்.
சன்ரைஸர்ஸ் அணி, 2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு 161 ஓட்டங்களை வெற்றிலக்காக நிர்ணயித்திருந்தது. கொல்கத்தா அணி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்போது, பதான் களமிறங்கினார்.
யூசுப் பதான் போன்ற துடுப்பாட்ட வீரரின் பிடியெடுப்பை தவறவிட்டால் பின்விளைவு எவ்வாறானதாக இருக்கும் என்ற போட்டிக்கு இந்த போட்டி சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது. கர்ன் சர்மா வீசிய முதல் பந்தில் இலகுவான பிடியெடுப்பொன்றினை பதான் கொடுக்க, மிட்-விக்கெட் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட அனிருந்தா தவறவிட்டார்.
குறித்த இந்த தவறவிடப்பட்ட பிடியெடுப்பு IPL தொடரில் புதிய சாதனையை உருவாக்க காரணமாகும் என எவரும் நினைத்தும் பார்க்கவில்லை. முதல் 4 பந்துகளில் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, நிதானமாக ஆடிய பதான், தன்னுடைய உண்மையான அதிரடியை பர்வீஸ் ரஷூலின் பந்து ஓவரில் ஆரம்பித்தார்.
முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய பதான், இந்த ஓவரில் தான் எதிர்கொண்ட அடுத்த நான்கு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் உள்ளடங்களாக 21 ஓட்டங்களை பெற்றார். இதனால், 9 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மீண்டும் கர்ன் ஷர்மா வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 15 ஓட்டங்களை விளாசிய பதான், 13 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
குறித்த காலப்பகுதியில் 2013ம் ஆண்டு கிரிஸ் கெயில் 17 பந்துகளில் விளாசிய அரைச்சதமே வேகமான அரைச்சதமாக இருந்தது. எனவே, சாதனை படைப்பதற்கான சரியான வாய்ப்பு பதானுக்கு இருந்தது.
சன்ரைஸர்ஸ் அணியின் அடுத்த ஓவரை உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் வீச, முதல் இரண்டு பந்துகளை பௌண்டரி மற்றும் சிக்ஸருக்கு விளாசி IPL தொடரில் வேகமான அரைச்சதத்தை யூசுப் பதான் பதிவுசெய்தார். அதுமாத்திரமின்றி மேலும் அதிரடி காட்டிய இவர் வெறும் 22 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசியிருந்தார். பதான் தன்னுடைய இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளை விளாசியிருந்தார்.
சுனில் நரைன் எதிர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 2017
கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி புதுவிதமான திட்டங்களுடன் 2017ம் ஆண்டு களமிறங்கியதுடன், முன்னணி சுழல் பந்துவீச்சாளராக வளம்வந்த மே.தீவுகளின் சுனில் நரைனுக்கு புதிய பொறுப்பை கொடுத்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியிருந்தது.
இடைக்கிடையே தன்னுடைய சிக்ஸர்களால் எதிரணிகளுக்கு தொல்லைக்கொடுத்துவந்த சுனில் நரைன் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான வாய்ப்பை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கச்சிதமாக கைப்பற்றிக்கொண்டார்.
பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் ஆடிய பெங்களூர் அணி 158 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், கொல்கத்தா அணி வெறும் 15.1 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை இலகுவாக அடைந்தது.
கொல்கத்தா அணிசார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கிரிஸ் லின் 21 பந்துகளில் அரைச்சதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கியிருந்த சுனில் நரைன், அணியின் சக வீரான யூசுப் பதானின் சாதனையை சமப்படுத்தும் இலக்கில் இருந்தார்.
பெங்களூர் அணியின் இரண்டாவது ஓவரை வீசிய சாமுவேல் பத்ரியின் முதல் 4 பந்துகளை எதிர்கொண்டு 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அணியின் 4வது ஓவரை வீசுவதற்கு பத்ரி மீண்டும் அழைக்கப்பட்டார். குறித்த ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசிய நரைன், மீண்டும் ஒரு பௌண்டரியை விளாசினார். இறுதி 2 பந்துகளுக்கும் 3 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, 10 பந்துகளில் நரைன் 30 ஓட்டங்களை அடைந்தார்.
மீண்டும் ஐந்தாவது ஓவரில் ஸ்ரீநாத் அரவிந்தின் ஓவரை எதிர்கொள்ள தயாரான நரைன், முதல் பந்தில் 2 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அடுத்த 3 பந்துகளையும் பௌண்டரிக்கு விளாச, நரைன் 14 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அடுத்த இரண்டு பந்துகளையும் அரவிந்த் வைட் பந்துகளாக வீசிய போதும், அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசி, 15 பந்துகளில் அரைச்சதம் கடந்து சுனில் நரைன் அசத்தினார்.
அதுமாத்திரமின்றி, தன்னுடைய அணி வீரர் யூசுப் பதான் 2014ம் ஆண்டு தன்னகத்தே கொண்டிருந்த வேகமான அரைச்சதத்துடன் தனது பெயரையும் சுனில் நரைன் இணைத்துக்கொண்டார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<