RCB அணிக்காக மீண்டும் அற்புதமாக பந்துவீசிய ஹஸரங்க

Indian Premier League 2022

1069

IPL தொடரில் நேற்று (09) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வனிந்து ஹஸரங்கவின் சிறந்த பந்துவீச்சின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

>>யாழ்ப்பாண அணியை பந்துவீச்சில் மிரட்டிய எம்புல்தெனிய மற்றும் அஷைன்

வனிந்து ஹஸரங்கவின் ஆரம்பத்தை பொருத்தவரை இஷான் கிஷன் இரண்டு பௌண்டரிகளையும், ரோஹித் சர்மா ஒரு பௌண்டரியையும் விளாச, 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

பின்னர் அணியின் 9வது ஓவரை வீச அழைக்கப்பட்ட இவர், மூன்றாவது பந்தில் டெவால்ட் பிரேவிஸை LBW முறையில் ஆட்டமிழக்கச்செய்து, குறித்த ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார்.

தொடர்ந்து 11வது ஓவருக்கு அழைக்கப்பட்ட வனிந்து ஹஸரங்க தன்னுடைய முதல் பந்திலேயே, மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான துடுப்பாட்ட வீரரான கீரன் பொல்லார்டை LBW முறையில் வீழ்த்தி பெங்களூர் அணியின் பக்கம் போட்டியை திரும்பினார். குறித்த ஓவரில் 2 ஓட்டங்களை மாத்திரமே வழங்கியிருந்தார்.

இறுதியாக சூர்யகுமார் யாதவ் ஹஸரங்கவின் பந்து ஓவரை சிறப்பாக எதிர்கொண்டு சிக்ஸர் ஒன்றை அடித்தாடியிருந்தாலும், மொத்தமாக 4 ஓவர்களிவல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹஸரங்க தன்னுடைய பந்துவீச்சு இன்னிங்ஸை நிறைவுசெய்திருந்தார்.

வனிந்து ஹஸரங்க இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக தொடரில், 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உமேஷ் யாதவை (9 விக்கெட்டுகள்) தொடர்ந்து இரண்டாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளார்.

பெங்களூர் அணியை பொருத்தவரை, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்திருந்த 152 என்ற வெற்றியிலக்கை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்ததுடன்,  தொடர்ச்சியாக தங்களுடைய 3வது வெற்றியை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<