“ஹஸரங்கவின் பந்துவீச்சை மீண்டும் எதிர்க்க தயார்” – பானுக

Indian Premier League 2022

1521

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்கவை எதிர்கொள்வதற்கான திட்டம் தொடர்பில் பானுக ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமான ESPN Cricinfoவுக்கு வழங்கிய செவ்வியின் போதே பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்கவை எதிர்கொள்வதற்கான தன்னுடைய தயார் நிலை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

>> NSL தொடரில் 4ஆவது சதத்தை நெருங்கும் ஓஷத பெர்னாண்டோ

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் பானுக ராஜபக்ஷ, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வனிந்து ஹஸரங்கவை அற்புதமாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்ததுடன், 22 பந்துகளில் 43 ஓட்டங்களை குவித்தார்.

சர்வதேச அளவில் துடுப்பாட்ட வீரர்கள் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட தடுமாறும் நிலையில், பானுக ராஜபக்ஷ ஹஸரங்கவை எதிர்கொள்வது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

“வனிந்து ஹஸரங்க உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த இரண்டு மாதங்களாக அவர் போட்டிகளில் விளையாடவில்லை. எனினும், அவர் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்துள்ளார். ஆரம்பத்தில் அவரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் சற்று சிக்கல்கள் இருந்தன.

அவருடைய பந்துகளை தடுத்தாடினால் அதில் எந்த பலனும் இல்லை என அறிந்தோம். எனவே அடித்தாட திட்டமிட்டோம். நான் பயிற்றுவிப்பாளர் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடி என்னுடைய அறிவை பகிர்ந்துக்கொண்டேன். நான் அவருக்கு எதிராக அதிக தடவைகள் விளையாடியுள்ளேன்.

எனவே, எனக்கு தேவையான இடங்களில் பந்துகள் விழுந்தால் அதனை கட்டாயமாக அடித்தாடுவேன். இந்திய ஆடுகளங்களில் பௌண்ஸ் சிறப்பாக உள்ளது. எனவே, அச்சமின்றி அடித்தாட முடியும். முதல் போட்டியில் (பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி) எனக்கு சாதகமாக அனைத்து விடயங்களும் இருந்தன. மீண்டும் ஹஸரங்கவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், முதல் போட்டியில் போன்றே ஆடுவேன்” என்றார்.

பானுக ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று போட்டிகளிலும் 43, 31 மற்றும் 9 என ஓட்டங்களை பெற்றுள்ளார். அவருடைய ஓட்டவேகம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. இவ்வாறான நிலையில் இன்றைய தினம் (08) பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<