NSL தொடரில் 4ஆவது சதத்தை நெருங்கும் ஓஷத பெர்னாண்டோ

215

யாழ்ப்பாண அணிக்கு எதிராக நடைபெற்று வருகின்ற நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கமில் மிஷார, கசுன் விதுர, ஓஷத பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களின் உதவியுடன் கண்டி அணி முன்னிலை பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (07) ஆரம்பமாகியது.

தனஞ்சய டி சில்வா தமையிலான யாழ்ப்பாண அணியும், கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கண்டி அணிக்கு கமில் மிஷார மற்றும் கசுன் விதுர ஜோடி சத இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

எனினும், முதல் விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, கமில் மிஷார 56 ஓட்டங்களுடனும், கசுன் விதுர 71 ஓட்டங்களுடனும் தனன்ஞய டி சில்வாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இம்முறை தேசிய சுபர் லீக்கில் கமில் மிஷார தனது 2 ஆவது அரைச்சதத்தையும், கசுன் விதுர தனது 3 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தனர்.

இதனையடுத்து ஓஷத பெர்னாண்டோவுடன் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்து இம்முறை தேசிய சுபர் லீக்கில் தனது 4ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதன்படி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது கண்டி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

ஓஷத பெர்னாண்டோ 91 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 57 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா 70 ஓட்டங்களைக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 288/2 (83.1) – ஓஷத பெர்னாண்டோ 91*, கசுன் விதுர 71, கமிந்து மெண்டிஸ் 57*, கமில் மிஷார 56, தனன்ஞய டி சில்வா 2/70

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<