IPL தொடரிலிருந்து விலகினார் நெதன் கூல்டர்–நைல்

Indian Premier League 2022

229

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நெதன் கூல்டர்–நைல், காயம் காரணமாக IPL தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற IPL மெகா ஏலத்தில் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நெதன் கூல்டர்–நைலை 2 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

கடந்த மார்ச் 29ஆம் திகதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவருக்கு விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதியில் ‘பெவிலியன்’ திரும்பினார்.

இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இம்முறை IPL தொடரில் இருந்து நெதன் கூல்டர்–நைல், விலகியுள்ளார். இதனை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

>> IPL இல் சாதனைகளை முறியடிக்கும் Bhanuka, Wanindu..! |Sports RoundUp – Epi 201

இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் ‘பிஸியோதெரபிஸ்ட்’ ஜோன் குளோஸ்டர் கூறுகையில், ”எதிர்பாராத விதமாக நெதன் கூல்டர்–நைலுக்கு காயம் ஏற்பட்டதால் IPL தொடரில் இருந்து விலக வேண்டியதாயிற்று. இவர் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வர அணி நிர்வாகம் எப்போதும் துணையாக இருக்கும்” என தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள், 28 T20 போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான நெதன் கூல்டர்–நைல், கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலும் அதற்கு முன்பு றோயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகளிலும் இடம்பெற்றார்.

இதேவளை, ராஜஸ்தான் அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய நெதன் கூல்டர்–நைலுக்குப் பதிலாக சகலதுறை வீரர் ஒருவரை அந்த அணி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<