நியூசிலாந்தின் மறக்க முடியாத கிரிக்கெட் வீரராகும் ரொஸ் டெய்லர்

192

நெதர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியினைத் தொடர்ந்து நியூசிலாந்தின் அனுபவ துடுப்பாட்டவீரரான ரொஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பிரியாவிடை பெற்றிருக்கின்றார்.

கடந்த 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசித்து வந்திருந்த ரொஸ் டெய்லர் நெதர்லாந்து அணியுடன் ஆடியிருந்த போட்டி, அவரின் 450ஆவது சர்வதேச போட்டியாகவும் அமைந்திருந்தது.

>> கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட கிழக்கின் முதல் புற்தரை மைதானம்

தனது இறுதிப் போட்டியில் டெய்லர் வெறும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற போதும் நெதர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 3-0 வைட்வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியிருந்தது.

ரொஸ் டெய்லர் முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை வென்ற அணியில் இடம்பெற்றது அடங்கலாக, அவுஸ்திரேலிய மண்ணில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர் போன்ற சாதனைகளையும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் செய்திருக்கின்றார்.

இதுதவிர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 18,199 ஓட்டங்களை 42.72 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் பெற்றிருக்கும் ரொஸ் டெய்லர் 112 டெஸ்ட் போட்டிகளிலும், 236 ஒருநாள் போட்டிகளிலும் 102 T20I போட்டிகளிலும் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்றிருக்கும் டெய்லர், மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளில் ஆடிய ஒரே கிரிக்கெட் வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ரொஸ் டெய்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக மாறிய 5 முக்கிய தருணங்கள் குறித்து பார்ப்போம்.

கன்னி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

நியூசிலாந்து அணி 2021ஆம் ஆண்டுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தினை, அதன் இறுதிப் போட்டியில் இந்தியாவினை வீழ்த்தியதன் மூலம் கைப்பற்றியிருந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை அடைவதற்கு ரொஸ் டெய்லர் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்

டெஸ்ட் போட்டிகளில் ரொஸ் டெய்லர் தனது சிறந்த இன்னிங்ஸினை 2015ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தார். அந்தவகையில் பெர்த் நகரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரொஸ் டெய்லர் 374 பந்துகளுக்கு 290 ஓட்டங்கள் எடுத்திருந்ததோடு, இந்த இன்னிங்ஸிற்குள் 43 பௌண்டரிகளையும் பெற்றிருந்தார்.

>> கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட கிழக்கின் முதல் புற்தரை மைதானம்

ரொஸ் டெய்லரின் இந்த இன்னிங்ஸ் நியூசிலாந்து அணிக்காக வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் எடுத்த கூடுதல் ஓட்டங்களாக மாறியிருந்ததோடு, டெய்லரின் துடுப்பாட்டத்தினால் குறித்த இன்னிங்ஸில் 559/9d ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி பெற்றிருந்தது.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்

ரொஸ் டெய்லர் தன்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸினை 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பதிவு

செய்திருந்தார். டெனிடேன் நகரில் நடைபெற்ற குறித்த ஒருநாள் போட்டியில் டெய்லர் 17 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 181 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்ததோடு, அதனால் நியூசிலாந்து அணி குறித்த போட்டியில் 336 ஓட்டங்களையும் எடுத்தது. ரொஸ் டெய்லரின் இந்த இன்னிங்ஸ் காரணமாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்ய, போட்டியின் ஆட்டநாயகனாகவும் ரொஸ் டெய்லர் தெரிவாகினார்.

உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போராட்ட அரைச்சதம்

நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாக ரொஸ் டெய்லர், இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பெற்ற அரைச்சதம் காரணமாக அமைந்திருந்தது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதி நடைபெற்ற மந்தகதியிலான மன்செஸ்டர் ஆடுகளத்தில் ரொஸ் டெய்லர், 90 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு இந்திய அணிக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> ஏழாவது முறையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான அசத்தல் சதம்

2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது சொஹைப் அக்தார் போன்ற பலமிக்க பந்துவீச்சாளர்களை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக ரொஸ் டெய்லர், ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்களை விளாசியிருந்தார். ரொஸ் டெய்லரின் அபார ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி குறித்த போட்டியின் இறுதி ஐந்து ஓவர்களில் 92 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, பாகிஸ்தானுக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களையும் 50 ஓவர்களில் பெற்றது. ரொஸ் டெய்லரின் பிறந்த தினத்தில் விளாசப்பட்ட இந்த சத உதவியுடன் நியூசிலாந்து அணி குறித்த

உலகக் கிண்ண குழுநிலைப் போட்டியில் பாகிஸ்தானை 110 ஓட்டங்களாலும் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<