மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பினால் அமைக்கப்பட்ட, புற்தரை கிரிக்கெட் மைதானம் இன்று (04) கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது.
>> மட்டக்களப்பு புற்தரை மைதான திறப்பு விழா ஒத்திவைப்பு
கிழக்கு மாகாணத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த புற்தரை மைதானத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுத்தந்த ஜாம்பவான்களில் ஒருவருமான அர்ஜுன ரணதுங்க திறந்து வைத்திருந்தார்.
>> Photos – KSV Batticaloa Turf Cricket Ground – Opening Ceremony
கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் மூலம் அமைக்கப்பட்ட இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் நிதி உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானம் அமைக்கப்பட்ட விடயம் தொடர்பில், இந்த மைதான நிர்மாணப் பணிகளுக்காக பிரதானமாக நிதி உதவி வழங்கிய கோட்டைமுனை விளையாட்டுக் கழக உறுப்பினரான புவனசிங்கம் வசீகரன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“கிழக்கு மாகாணம் என்பதை விட மட்டக்களப்பில் இருந்து ஒரு முதற்தர கிரிக்கெட் வீரரை உருவாக்க வேண்டும் என்பது எமது நோக்கமாக இருக்கின்றது. நாம் ஒரு வீரரை உருவாக்குவதன் மூலம், அதனைத் தொடர்ந்து பல வீரர்கள் இங்கே உருவாகுவார்கள்”
மட்டக்களப்பில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் யாராவது ஒருவீரர் இலங்கையின் முதற்தர அணிகளுக்காக ஆடியிருப்பதை உங்களுக்கு காட்ட முடியாது. எங்களது பார்வையில் இங்கே பொழுதுபோக்கின் அடிப்படையிலேயே கிரிக்கெட் போட்டிகள் இருந்து வருகின்றன. எனவே, முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு ஒரு காரணியாகவே இந்த மைதானம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மைதானம் அமைக்கப்பட்டதால் இங்கே இருக்கும் வீரர்கள் உடனே தேசிய மட்டத்தில் ஆட ஆரம்பித்துவிடுவர் என்றும் கூறிவிட முடியாது. எனவே, வீரரை வளர்த்துவிடுவதற்கான ஒரு காரணியாகவே மைதானம் இருக்கின்றது. இந்த மைதானத்துடன் சேர்த்து எமது ஏனைய முயற்சிகளும் கைகொடுக்கும் போதே எமது திட்டம் வெற்றியடையும்” என்றார்.
இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கை டெஸ்ட் அணியின் முதல் தலைவர் பந்துல வர்ணபுர, உபுல் சந்தன ஆகியோரின் ஆளுகையில் நடைபெற்றதோடு, மைதானத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 200 மில்லியன் வரையில் செலவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேநேரம், இந்த மைதானத்தின் திறப்பு விழாவில் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சி T20 கிரிக்கெட் போட்டியில் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண நாயகர்கள் அடங்கிய அணியும், பெட்டி ஹீரோஸ் (Batti Heroes) அணியும் பங்கெடுத்திருந்தன.
>>தி ஹண்ட்ரட் வீரர்கள் வரைவில் இலங்கையின் 22 வீரர்கள்
தொடர்ந்து இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தரப்பு 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 190 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய பெட்டி ஹீரோஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த புற்தரை கிரிக்கெட் மைதானமானது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முழுமையாக கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு மைதானமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<