இலங்கை கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், அதற்கான உடல்தகுதியை தக்கவைத்துக் கொள்ளாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிலைத்திருப்பது மிகவும் கடினமான விடயம் என இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், உடல்தகுதியைக் காட்டிலும், தன்னிடம் உள்ள திறமையை வளர்த்துக் கொள்ளவே அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
>> 9 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசிய பானுக ராஜபகக்ஷ
இம்முறை IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற பானுக, தனது கிரிக்கெட் எதிர்காலம், உடல் தகுதி சர்ச்சை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் திட்டங்கள் குறித்து இந்தியாவின் TimesofIndia.com இணையத்தளத்துக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளும், பானுக ராஜபக்ஷ அதற்கு அளித்த பதிலையும் இங்கு பார்க்கலாம்.
உங்களது முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனவே, குறித்த வெற்றி இலக்கை அடைவதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வைத்திருந்த திட்டம் என்ன? அந்த இலக்கை துரத்த அணித்தலைவர் மயங்க் அகர்வால் அணியிடம் என்ன சொன்னார்?
மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை துரத்திச் செல்வதை நாங்கள் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 205 என்ற இலக்கை துரத்துவது சற்று கடினம். ஆனால், மயங்க் அகர்வால் அதை மிக அமைதியாகவும், ஒழுங்காகவும் எதிர்கொண்டது பாராட்டுக்குரியது. அவர் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் எப்பொழுதும் பேசுவதை விட போட்டியில் அதிக கவனம் செலுத்துகின்ற வீரர்.
ஷிகர் தவானுடன் துடுப்பெடுத்தாடும் போது அவர் என்ன சொன்னார்?
ஒரு சிறந்த ஆரம்பத்தைப் பெறுவது முக்கியம். அது எமது துடுப்பாட்ட திறமையை தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும். எனவே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய மயங்க் மற்றும் ஷிகர் ஆகிய இருவருக்கும் அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில்
இவ்வாறான ஆடுகளத்தில் விக்கெட்டை வீழ்த்துவது எளிதல்ல. ஷிகர் மற்றும் மயங்க் ஒரு பெரிய இன்னிங்ஸுக்கு அடித்தாளம் இட்டது மிகவும் பாராட்டத்தக்கது. நான் 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய போது, ஷிகர் என்னை அமைதியாக இருக்கச் சொன்னார். பொறுமையாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்கும்படி ஷிகர் என்னிடம் சொன்னார். எனவே, முதல் போட்டியிலேயே அணிக்காக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
>> 2022 IPL தொடரில் களமிறங்கும் இளம் வீரர்கள்
இம்முறை IPL தொடரில் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் ஜோடி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இது கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த T20 லீக் தொடராகும். ஷிகர் மற்றும் மயங்க் இருவரும் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் என்பதை நான் உறுதியாக கூறுவேன். மயங்க் ஒரு தலைவராக மிகவும் உற்சாகமானவர். மைதானத்தில் தனது வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த தலைவர். நான் 19 வயதிற்குட்பட்ட அணியில் இருக்கும் போது மயங்க் அகர்வாலுடன் விளையாடினேன். எனக்கு அவரை நன்கு தெரியும். அவருடைய நல்ல நாட்களைப் போல மோசமான நாட்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு தலைவராக, வீரர்களுடன் அவர் உரையாடும் விதம் சிறப்பு.
இம்முறை IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளதா?
இந்த பருவ காலம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பஞ்சாப் கிங்ஸ் இதுவரை சம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதுவே சிறந்த வாய்ப்பு. சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வியூகங்கள் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டுள்ளன. எங்களுக்கு பல இலக்குகள் உள்ளன. இந்த முறை சம்பியன் பட்டத்தை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எங்களிடம் வலுவான அணி உள்ளது. ஏனெனில், பஞ்சாப் கிங்ஸ் இம்முறை துடுப்பாட்டத்தில் பலமிக்க அணிகளில் ஒன்றாக உள்ளமை இதற்கு முக்கிய காரணம்.
உங்களுக்கு ஒடியன் ஸ்மித்தை பார்த்ததும் கிறிஸ் கெய்ல் ஞாபகம் வருகிறதா?
அவரை நாங்கள் ‘Baby Rhino’ (குழந்தை காண்டாமிருகம்) என்று அழைப்போம். அவர் மிகவும் பலம் பொருந்தியவர். இதுவரை அவரது துடுப்பு மட்டையின்
நடுவில் பந்தை அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது நடக்கும் போது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவரை கிறிஸ் கெய்லுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் கிறிஸ் கெய்ல் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னணி ஜாம்பவான்களில் ஒருவர். ஒடியன் ஸ்மித் ஒரு வீரராக வளர்வதை நான் பார்த்திருக்கிறேன்.
>> எனது அனுபவம் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் – மாலிங்க
உங்களுடைய உடல் தகுதி மற்றும் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிச் சொன்னால்?
எனது உடல்தகுதி தொடர்பில் மிகப் பெரிய அர்ப்பணிப்பையும், அவதானத்தையும் செலுத்தி வருகிறேன். எனக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களிலும் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மாத்திரம் தான் இவற்றையெல்லாம் செய்கிறேன். எனவே என்னுடைய உடல் தகுதியை உரிய முறையில் பேணிக் கொண்டால் நிச்சயம் என்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியும். அதேபோல, எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.
இலங்கை கிரிக்கெட் அணியில் உடல்தகுதியை நிரூபிக்க பின்பற்றப்படுகின்ற பரிசோதனை மிகவும் கடினமானது. எனினும், உடல் தகுதி தொடர்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கிரிக்கெட் விளையாடவே நான் அதிகம் முயற்சி செய்தேன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக திறமைகளை வெளிப்படுத்த முடிந்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளவே நான் அதிக கவனம் செலுத்தினேன். ஆனாலும், இலங்கை தேர்வாளர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற உடல் தகுதி பரிசோதனையை சரிவர செய்வது எனக்கு சற்று கடினம். அதன் காரணமாகவே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்தேன்.
ஓய்வை அறிவித்த பிறகு இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு, மஹேல ஜயவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடினேன். இலங்கை அணிக்கு விளையாடுகின்ற அனைத்து தகுதியும், திறமையும் என்னிடம் இருப்பதாக அவர்கள் உறுதியாக தெரிவித்து எனக்கு நம்பிக்கை அளித்தார்கள். எனவே, அவர்களது ஆலோசனைக்கு அமைய எனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டேன்.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணிக்காக எதிர்வரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு விளையாடுவதற்கு ஆவலுடன் உள்ளேன். ஒரு வீரராக சாதிக்க வேண்டுமாயின் உடல்தகுதி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அது வீரருக்கு வீரர் மாறுபட்டதாக காணப்படலாம். என்னைப் பொறுத்தமட்டில் திறமைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என கூறுவேன்.
எனவே, இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட கிடைத்தது இறைவனால் எனக்கு வழங்கப்பட்ட ஆசிர்வாதம் என நினைக்கிறேன். 2018இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் தான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால் நிச்சயம் என்னால் இலங்கை அணிக்காக விளையாடுவதற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.
அந்தக் காலப்பகுதியில் சிரேஷ்ட வீர்ரகள் அணியில் இருந்து வெளியேறியதால் தான் எனக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட காரணத்தால் தான் என்னால் கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த காலப்பகுதியாக இருந்தது என கூறலாம். இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு உள்ளுர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தேன். ஆனாலும், இலங்கை அணிக்காக விளையாட 9 முதல் 10 ஆண்டுகள் வரை காத்திருந்தேன்.
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?
மைக் ஹஸ்ஸியை நான் பாராட்டுகிறேன். நான் அவரை எல்லா நேரத்திலும் பார்த்தேன். நான் அவரைப் பின்தொடர்ந்தேன். நான் அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவருடன் பேசுவேன். கடந்த முறை அவுஸ்திரேலியா சென்றபோது அவரிடம் நிறைய பேசினேன்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<