மோசமான ஆட்டத்தினால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி

274

19 வயதின் கீழ் டிவிஷன்-II பாடசாலைகள் பங்கெடுக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில், இன்று (30) பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை 6 விக்கெட்டுக்களால் இலகுவாக  வீழ்த்தியுள்ளது.

>>டிவிஷன்-II காலிறுதியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி

டிவிஷன்-II பிரிவு A (Tier A) அணிகளாகிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணிகள் பங்கெடுத்த இந்த காலிறுதிப் போட்டி, கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் அன்டன் அபிஷேக் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி எதிரணி வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியதோடு 28.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 62 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் அன்டன் அபிஷேக் மாத்திரமே ஈரிலக்க ஓட்டங்களை கடந்து, 27 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>>இங்கிலாந்தின் கௌண்டி அணியுடன் இணையும் திமுத் கருணாரத்ன!

மறுமுனையில் ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் மன்மித்த துல்ரான் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெடுக்களைச் சாய்த்திருக்க, ரசிக்க டில்ஷான் மற்றும் விஷ்வ லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 63 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணி அதனை 14.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை 63 ஓட்டங்களுடன் அடைந்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கிருபானந்தன் கஜகர்ணன் முதல் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியின் வெற்றியோடு பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி, தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 62 (28.4) அன்டொன் அபிஷேக் 27, மன்மித்த துல்ரான் 17/4, ரசிக்க டில்சான் 18/3, விஷ்வ லஹிரு 16/3

ஸ்ரீ சுமங்கல கல்லூரி, பாணந்துறை – 63/4 (14.1) கிருபானந்தன் கஜகர்ணன் 16/3

முடிவு – ஸ்ரீ சுமங்கல கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<