இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியானது முதன்முறையாக ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளை தங்களுடைய சொந்த மண்ணில் நடத்தவுள்ளது.
ஒருநாள் மற்றும் T20I தொடர்கள் மே 18ம் திகதி முதல் ஜூன் 7ம் திகதிவரை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளாக அமையவுள்ளன.
பாகிஸ்தான் மகளிர் மற்றும் இலங்கை மகளிருக்கு இடையிலான இந்த தொடர் கடந்த வருடம் நடைபெறவிருந்த போதும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் இந்த தொடரானது பேர்மிங்கமில் நடைபெறவுள்ள (ஜூலை, ஆகஸ்ட்) பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா (செப்டம்பர்) ஆகியவற்றுக்கு தகுதிபெறுவதற்கான முக்கிய தொடராக அமையவுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பல தடவைகள் இருதரப்பு தொடர்களில் விளையாடியிருந்தாலும், முதன்முறையாக இலங்கை மகளிர் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<