தெற்காசிய நகர்வல ஓட்டத்தில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்

South Asian Cross-Country Championship 2022

183

இந்தியாவின் கொஹீமாவில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

அத்துடன், இருபாலாருக்குமான சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கை அணி ஒட்டுமொத்த ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெற்று அசத்தியது.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகள் பங்குகொண்ட அங்குரார்ப்பண தெற்காசிய நகர்வல சம்பியன்ஷிப் தொடர் கடந்த 26ஆம் திகதி இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள கொஹீமாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டித் தொடருக்கான இலங்கையிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டத்தில் பங்குகொண்ட இலங்கையின் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார வெள்ளிப் பதக்கம் வென்றார்.

10 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இப்போட்டியை 33 நிமிடங்கள் 12.00 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார். அத்துடன், குறித்த போட்டியை 31 நிமிடங்கள் 08.00 செக்கன்களில் நிறைவுசெய்த இந்திய வீரர் தர்ஷன் சிங் தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, நேபாளத்தின் முகேஷ் பஹார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குகொண்ட மலையகத்தின் நட்சத்திர மெய்வல்லுனர் குமார் சண்முகேஸ்வரனுக்கு 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. போட்டியை அவர் 33 நிமிடங்கள் 14.00 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இதனிடையே, பெண்களுக்கான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டத்தில் பங்குகொண்ட சுஜானி பெரேரா, போட்டித் தூரத்தை 39 நிமிடங்கள் 48.00 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான கனிஷ்ட பிரிவில் போட்டியிட்ட ஜாலிய சங்கீத் மதுஷான் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். 8 கிலோ மீட்டரைக் கொண்டதாக நடைபெற்ற குறித்த போட்டியை 29 நிமிடங்கள் 02.00 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

இதன்படி, ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றதன் மூலம் அணிகளுக்கான குழு நிலையில் இலங்கை அணி இரண்டாவது இடத்தையும், பெண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<