லெஜண்ட்ஸ் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

Sri Lanka tour of India 2022

2359

சர்வதேசத்தின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் வீதிப் பாதுகாப்பு உலக தொடர் இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஜூன் 4ம் திகதி முதல் ஜூலை 3ம் திகதிவரை இந்தியாவின் லக்னோவ், இந்தூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள வீதிப் பாதுகாப்பு உலக தொடரில் புதிய அணியாக நியூசிலாந்து லெஜண்ட்ஸ் அணி இணைந்துக்கொண்டுள்ளது. முதல் தடவையாக நடைபெற்ற தொடரில் இலங்கை, இந்தியா, மே.தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடியிருந்தன.

வீதிப் பாதுகாப்பு உலக தொடரானது இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்றுவருவதுடன், இந்த தொடரானது வீதி பாதுகாப்பு தொடர்பான விளிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றிருந்த இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்ததோடு, இரண்டாம் இடத்திற்கான பட்டத்தினை இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் வென்றிருந்தனர்.

குறித்த இந்த தொடரின் இரண்டாவது பருவகாலம் கடந்த ஆண்டு நடைபெறுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கொவிட்-19 தொற்று காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கடந்த மாதம் இந்த போட்டித்தொடர் ஆரம்பமாகும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது, ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<