இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (18) நிறைவுக்கு வந்தன.
இதில் காலி அணியின் சங்கீத் குரே, பபசர வடுகே ஆகிய இருவரும் அரைச்சதம் அடிக்க, கண்டி அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் 94 ஓட்டங்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேபோன்று, கண்டி அணிக்க்கு எதிரான போட்டியில் இலங்கை தேசிய அணி வீரர் மாலிந்த புஷ்பகுமார, 7 விக்கெட்டுகளைக் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.
யாழ்ப்பாணம் எதிர் காலி
சங்கீத் குரே மற்றும் பபசர வடுகேவின் அரைச்சதத்தின் மூலம் யாழ்ப்பாண அணிக்கு எதிராக வலுவான ஓட்ட எண்ணிக்கையை காலி அணி பெற்றுக்கொண்டது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறுகின்ற இந்தப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாண அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.
சங்கீத் குரே 58 ஓட்டங்களையும், பபசர வடுகே 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று காணப்படுகின்றனர்.
போட்டியின் சுருக்கம்
யாழ்ப்பாண அணி – 254 (83.5) – நவோத் பரணவிதான 34, நிஷான் மதுஷ்க 29, கல்ஹார சேனாரத்ன 29, சுமிந்த லக்ஷான் 4/28, டில்ஷான் மதுஷங்க 3/51, சலன டி சில்வா 2/72
காலி அணி – 113/0 (30.4) – சங்கீத் குரே 58*, பபசர வடுகே 51*
- NSL தொடரில் ஹெட்ரிக் சதத்தை தவறவிட்ட ஓஷத
- சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி
- கமிந்து ஹெட்ரிக் சதமடிக்க; 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கசுன் ராஜித
கண்டி எதிர் தம்புள்ளை
கண்டி அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தம்புள்ளை அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ஓட்டங்களைக் குவித்தது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த கண்டி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 446 ஓட்டங்களைக் குவித்தது.
கண்டி அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஓஷத பெர்னாண்டோ (97), அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் (94), லஹிரு உதார (83), கமில் மிஷார (74) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட மாலிந்த புஷ்பகுமார 120 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ளை அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மினோத் பானுக 37 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, கண்டி அணிக்காக அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 446 (128.5) – ஓஷத பெர்னாண்டோ 97, கமிந்து மெண்டிஸ் 94, லஹிரு உதார 83, கமில் மிஷார 74, மாலிந்த புஷ்பகுமார 7/120
தம்புள்ளை அணி – 77/3 (23.3) – மினோத் பானுக 37, அஷான் பிரியன்ஞன் 19, அசித்த பெர்னாண்டோ 2/25
இந்த இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<