RCB தலைவராக பாப் டு பிளெசிஸ்; விளக்கமளிக்கும் RCB முகாமைத்துவம்

Indian Premier League 2022

246
RCB

இந்த ஆண்டு IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய தலைவராக தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 15 ஆவது அத்தியாயம் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு IPL தொடர் முடிந்ததுமே, 2013 ஆம் ஆண்டிலிருந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த விராட் கோஹ்லி தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

எனவே, இந்த ஆண்டு IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோஹ்லி ஒரு சாதாரண வீரராக விளையாடவுள்ளார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இம்முறை மெகா ஏலத்தில் பாப் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகியோரை தலைவர்களுக்கான வீரர்களாக எடுத்தது.

இந்த நிலையில், விராட் கோஹ்லிக்கு அடுத்தபடியாக யாரை தலைவராக நியமிப்பது என்ற குழப்பத்தில் நீண்ட நாட்களாக ஆலோசனைகள் நடைபெற்றன.

குறிப்பாக, தலைவர் பதவிக்கான போட்டியில் பாப் டு பிளெசிஸ், க்ளென் மெக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் திருமண பந்தத்தில் இணையவுள்ள க்ளென் மெக்ஸ்வெல் IPL தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார். தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தியபோது பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் பாப் டு பிளெசிஸ் தான் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிலும் குழப்பம் இருந்தது. விராட் கோஹ்லியின் இராஜினாமாக் கடிதத்தை அந்த அணி நிர்வாகம் இன்னும் ஏற்கவே இல்லை எனத் தகவல் வெளியானது. மேலும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்ட விளம்பர உருவங்களும் விராட் கோஹ்லியின் உருவத்தை போன்றே இருந்தது.

இதனால் விராட் கோஹ்லியே மீண்டும் தலைவராக நியமிக்கப்படலாம் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் (12) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. பெங்களூர் மியூசியம் சாலையில் இடம்பெற்ற கோலாகல விழாவில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் புதிய தலைவராக பாப் டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டார்.

ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோஹ்லி மற்றும் ஷேன் வொட்சன் வரிசையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஏழாவது தலைவராக பாப் டு பிளெசிஸ் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க அணியை வழிநடத்தி இருந்தாலும், IPL போட்டிகளை பொறுத்தவரை டு பிளெசிஸின் முதலாவது தலைவர் பதவி இதுவாகும்.

இதனிடையே, தலைவர் பொறுப்பு குறித்து பேசியுள்ள பாப் டு பிளெசிஸ், இந்த வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நிறைய IPL விளையாடியுள்ளேன். வெளிநாட்டு வீரரை நம்புவது சிறிய விடயம் அல்ல என்பது எனக்கு புரியும். எனவே, இந்திய வீரர்களின் அற்புதமான பங்களிப்பை நான் பெரிதும் நம்பியிருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, விராட் கோஹ்லி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன்? பாப் டு பிளெசிஸை ஏன் புதிய தலைவராக நியமித்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கு அந்த அணியின் கிரிக்கெட் இயக்குனர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய மைக் ஹெசன்,

விராட் கோஹ்லி அவரது அனைத்தையும் ஒரு தலைவராக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கொடுத்துள்ளார். அவரது இதயம் மற்றும் ஆன்மா அனைத்தையும் வழங்கியுள்ளார். அவருக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டுமென்பதால் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஒரு சிரேஷ்ட வீரராக, முன்னணி துடுப்பாட்ட வீரராக ஆட வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, தலைவர் பதவியை அடிப்படையாக வைத்து தான் பாப் டு பிளெசிஸை ஏலத்தில் எடுத்தோம். ஆனால், ஏலத்தின் முன் விராட் கோஹ்லி அல்லது க்ளென் மெக்ஸ்வெல் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். அவர்களுடைய தலைமைத்துவ அனுபவங்கள் எமது அணிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருந்தது. ஆனாலும் ஏலத்தின் போது பாப் டு பிளெசிஸ் தான் எமது முதல் தெரிவாக இருந்தார். அவர் தலைவராக பல சாதனைகளைப் புரிந்தவர்.

அதேபோன்று, அவரது தலைமைத்துவத்தில் காணப்படுகின்ற நுட்பங்களையும் நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். இறுதியில் கோஹ்லியைப் போன்ற அனுபம் கொண்ட ஒரு தலைவரை நாங்கள் தற்போது பெற்றுள்ளோம். அதேபோல, தினேஷ் கார்த்திக், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் அணியில் இருப்பது எமது அணிக்கு இன்னும் வலுச்சேர்த்துள்ளது.

எனவே, பாப் டு பிளெசிஸின் தலைமைத்துவத்தில் இம்முறை IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<