கோலூன்றிப் பாய்தல் சம்பியனை மீண்டும் வீழ்த்தினார் புவிதரன்

2nd Selection Trial ahead of Asian Games 2022

619

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனரான அருந்தவராசா புவிதரன், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதலிடத்தைப் பிடித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற இந்தப் போட்டித் தொடரில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றியுள்ளார்கள்.

>>தேசிய மெய்வல்லுனர் 2ஆவது தகுதிகாண் போட்டிகள் தியகமவில்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற இந்தப் போட்டித் தொடரில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றியுள்ளார்கள்.

இந்த நிலையில், தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயத்தின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் இளம் மெய்வல்லுனரான அருந்தவராசா புவிதரன் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.80 மீட்டர் உயரத்தைத் தாவிய புவிதரன், அதன்பிறகு 4.90 மீட்டர் உயரத்தை 2ஆவது முயற்சியிலும் தாவி அசத்தினார்.

மறுபுறத்தில் இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் தேசிய சம்பியனான இஷார சந்தருவன், 4.80 மீட்டர், 4.90 மீட்டர் மற்றும் 5.00 மீட்டர் உயரங்களைத் தாவி புவிதரனுக்கு சவால் அளித்தார்.

இதனையடுத்து வழங்கப்பட்ட 5.10 மீட்டர் உயரத்தை புவிதரன் முதலாவது முயற்சியில் தாண்ட, இஷார சந்தருவன் மூன்று முயற்சியிலும் தோல்வி கண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

எனினும், 5.12 மீட்டர் உயரத்தைத் தாவுவதற்கு புவிதரன் மேற்கொண்ட மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.

இதன்படி, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்கரராகிய இஷார சந்தருவனை இரண்டாவது முறையாக தோற்கடித்த புவிதரன், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

அதுமாத்திரமின்றி, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஒரு சென்றி மீட்டரினால் புவிதரன் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

>>கோலூன்றிப் பாய்தல் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற புவிதரன்

முன்னதாக 2017ஆம் ஆண்டு தியகமவில் நடைபெற்ற தேசிய மெய்வவ்லுனர் தகுதிகாண் போட்டியில் இஷார சந்தருவன், 5.11 மீட்டர் உயரத்தைத் தாவி இலங்கை சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிப்ராஸுக்கு 2ஆவது இடம்

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் நிப்ராஸ், போட்டியை 3 நிமிடங்களும் 59.1 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் நிப்ராஸ் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சபானுக்கு ஆறுதல் வெற்றி

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான், 10.94 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின் முதலாவது அத்தியாயத்தில் சபானுக்கு 5 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனிடையே, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட சப்ரின் அஹமட், 15.27 மீட்டர் உயரத்தைப் பாய்ந்து 7 ஆவது இடத்தையும், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட ஆர். ரதுஷான் 6 ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் சிதும், தருஷி

நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட கேகாலை புனித ஆனால் கல்லூரியைச் சேர்ந்த சிதும் ஜயசுந்தர, போட்டித் தூரத்தை 55.84 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் உறுதி செய்தார்.

>>மெய்வல்லுனர் தகுதிகாணில் ஜொலித்த சபான், சண்முகேஸ்வர்ன் மற்றும் துஷாந்தன்

இதனிடையே, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியை 47.33 செக்கன்களில் நிறைவு செய்த சிதும், 2 ஆவது இடத்தைப் பிடித்தார். குறித்த போட்டியில் இலங்கையின் இளம் வீரர் அருண தர்ஷன முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நேற்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட வலல ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன, போட்டித் தூரத்தை 54.36 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் உறுதி செய்தார்.

இதேவேளை, நேற்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியை 54.29 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி, தேசிய சம்பியனான நதீஷா ராமநாயக்கவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<