இந்திய குழாத்திலிருந்து குல்தீப் யாதவ் வெளியேற்றம்!

India vs Sri Lanka 2022

317

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்திலிருந்து சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகின்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியினை பதிவுசெய்திருந்தது.

>>மூவர்ஸ் அணிக்காக ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய விதுசன்

அந்தவகையில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் அக்ஷர் பட்டேல் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், குல்தீப் யாதவ் குழாத்திலிருந்து நீக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அணியை பொருத்தவரை ஏற்கனவே, ரவீந்திர ஜடேஜா இடதுகை சுழல் பந்துவீச்சாளராக உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அக்ஷர் பட்டேலும் தற்போது இணைந்துள்ளதால், மூன்று இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் அவசியம் அல்ல என இந்திய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜயண்ட் யாதவ் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களும் இந்திய குழாத்தில் உள்ளனர். எனவே, ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்ற காரணத்தால், குழாத்திலிருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அக்ஷர் பட்டேல் உபாதைக்கு முகங்கொடுத்திருப்பதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணித்தெரிவில் இருப்பார் எனவும் இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவார் என எதிர்பார்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பகலிரவு டெஸ்ட் போட்டியாக எதிர்வரும் 12ம் திகதி பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<