சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார், காயம் காரணமாக இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு IPL தொடர் இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் சென்னை சுபர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற IPL மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹாரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சுபர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. IPL ஏலம் வரலாற்றில் சென்னை அணி 10 கோடிக்கு மேல் ஏலம் எடுத்த முதல் வீரர் தீபக் சஹார் தான்.
இந்த நிலையில், அண்மையில் நிறைவுக்குவந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3ஆவது T20i போட்டியின் போது தீபக் சஹாருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதுடன், ஸ்கேன் பரிசோதனையில் தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இலங்கை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- 2022 IPL இல் வெவ்வேறு குழுவில் சென்னை, மும்பை அணிகள்
- பஞ்சாப் அணியின் புதிய தலைவராக மயங்க் அகர்வால் நியமனம்
- “சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின்
தீபக் சஹாருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நீண்ட நாட்களாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தீபக் சஹார் இந்த ஆண்டு IPL தொடரில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இம்முறை IPL தொடரில் களமிறங்கவுள்ள சென்னை அணியில் சொல்லும்படியான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் தீபக் சஹாரும் விளையாடாமல் இருந்தால் அது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
எனினும் IPL தொடரின் இறுதிக்கட்ட லீக் போட்டிகளில் சென்னை அணியுடன் அவர் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தேசிய கிரிக்கெட் அகடமியிடமிருந்து தீபக் சஹாரின் காயத்தின் தற்போதைய நிலை குறித்த விபங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை சுபர் கிங்ஸ் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக 58 போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சஹார், இதுவரை 58 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<