இந்திய மண்ணில் வரலாறு படைக்குமா இலங்கை டெஸ்ட் அணி??

1949

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரிற்குப் பின்னர் அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.

>>கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட்: பார்வையாளர்களுக்கு அனுமதி!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்  (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்ளடங்கும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) மொஹாலியில் நடைபெற, இரண்டாவது போட்டி பெங்களூரில் எதிர்வரும் 12ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்றது.

கடந்தகாலப் போட்டிகள்

இலங்கை கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அணியினால் கடந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில்  சவால்களை எதிர்கொண்டிருந்தது என்றால், அந்த எதிரணி இந்திய அணியாகவே இருக்க முடியும்.

இலங்கை – இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, குறித்த போட்டிகளில் இந்தியா 20 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதோடு, இலங்கை 7 போட்டிகளில் மாத்திரமே வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இதேநேரம் இரு அணிகளுக்குமிடையிலான 17 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றன.

மறுமுனையில் இலங்கை அணி கடைசியாக இந்திய அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றினை கைப்பற்றியது கடந்த 2008ஆம் ஆண்டிலேயே நடைபெற்றிருந்ததோடு, இரு அணிகளும் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கின்றது.

அதேநேரம் இலங்கை அணி 1982ஆம் ஆண்டு தமக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்ததில் இருந்து இதுவரை இந்திய மண்ணில் வைத்து டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வரலாற்றினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஒன்று இலங்கை அணிக்கு இந்த இந்திய தொடரின் மூலம் மீண்டும் கிடைத்திருக்கின்றது.

>>“சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின்

எதிர்பார்ப்புக்கள்

இலங்கை அணி இந்திய சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஆடியிருந்த T20I தொடரினை  3-0 என பறிகொடுத்திருந்தமை ஏமாற்றம் தந்த போதும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி தமது தவறுகளை திருத்திக் கொண்டு செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் வருவதனால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிக முக்கியமானதாகும். தற்போது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி தமது நிலையினை தொடர்ந்து தக்கவைக்க இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்திருப்பதோடு, ஐந்தாம் இடத்தில் காணப்படும் இந்திய அணியும் முன்னேற்றத்தினை எதிர்பார்த்திருக்கின்றது.

இது ஒரு பக்கமிருக்க இந்திய கிரிக்கெட் அணி சொந்த மைதான ஆதிக்கத்துடன் இலங்கை தொடரில் களமிறங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே, இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி கடும் சவால் உருவாக்கும் அணியாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

இலங்கை அணி

திமுத் கருணாரட்ன மூலம் வழிநடாத்தப்படும் இலங்கை அணி இந்த தொடரில் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான லஹிரு திரிமான்னவினை மீண்டும் இணைத்திருக்கின்றது. லஹிரு திரிமான்ன கடந்த ஆண்டில், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த முன்னணி வீரர்களில் ஒருவராக மாறியிருந்தார். இது ஒரு பக்கமிருக்க அதிகம் பரீட்சிக்கப்படாத இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க ஆகியோருக்கும் இந்திய அணியுடனான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களுடன் சேர்த்து தனன்ஞய டி சில்வா மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோரும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டவீரர்களாக நம்பிக்கை சேர்க்கின்றனர்.

>>பஞ்சாப் அணியின் புதிய தலைவராக மயங்க் அகர்வால் நியமனம்

மறுமுனையில் இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லவும் மீண்டிருப்பதால், விக்கெட்காப்பாளராக டிக்வெல்லவா அல்லது தினேஷ் சந்திமாலா செயற்படுவார் என்கிற கேள்வி எழுகின்றது. இவர்கள் தவிர உபாதைச் சிக்கல்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிசும் துடுப்பாட்டவீரராக இலங்கை அணிக்கு பலம் சேர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பந்துவீச்சினை பொறுத்தவரை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலின் கடைசி சர்வதேச தொடராக இலங்கை – இந்திய அணிகள் மோதுகின்ற டெஸ்ட் தொடர் அமைகின்றது. சுரங்க லக்மாலிற்கு துஷ்மன்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் வேகப்பந்துவீச்சாளர்களாக கைகொடுக்க பிரவின் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் இலங்கை அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர்.

இலங்கை அணி

திமுத் கருணாரட்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தனன்ஞய டி சில்வா, அஞ்சலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் (உடற்தகுதியினைப் பொறுத்து), தினேஷ் சந்திமால், சரித் அசலன்க, நிரோஷன் டிக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய், பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய

இந்திய அணி

ரோஹித் சர்மா அணித்தலைவராக பொறுப்பெடுத்த பின்னர், இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடராக இலங்கை – இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் அமைகின்றன.

அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியினைக் கொண்ட தொடராகவும், இலங்கை – இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அமைகின்றது. எனவே இந்திய அணியின் முக்கியமான இரு வீரர்களுக்கு முக்கியத்துவமிக்கதாக இலங்கை – இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் அமைகின்றன.

இந்திய அணிக் குழாத்தினை நோக்கும் இலங்கை தொடரில் சிரேஷ்ட வீரர்களாக காணப்பட்ட அஜிங்கியா ரஹானே, இசான்த் சர்மா, ரிதிமான் சஹா மற்றும் செடேஸ்வர் புஜாரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் துடுப்பாட்டத்துறை ஸ்ரேயாஸ் அய்யர், மயான்க் அகர்வால், சுப்மான் கில் மற்றும் ரிசப் பாண்ட் போன்ற வீரர்க மூலம் பலப்படுத்தப்படுகின்றது.

>>WATCH – WHITEWASH தோல்விக்குப் பதிலடி கொடுக்குமா திமுத்தின் டெஸ்ட் படை? |Sports RoundUp – Epi 196

இதேநேரம் சகலதுறைவீரர்களாக காணப்படும் ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி போன்ற வீரர்களும் இந்திய அணிக்கு மேலதிக துடுப்பாட்டப் பலமாக இருக்கின்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சுத்துறை ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் அடங்கலாக மொஹமட் சமி, மொஹமட் சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்களின் வேகத்துடனும் பலம் பெறுகின்றது.

இந்திய அணிக்குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்பிரித் பும்ரா (உதவி தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷாப் பான்ட் (விக்கெட் காப்பாளர்), கே.எஸ் பரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<