சதீர அடுத்தடுத்து அரைச்சதங்கள் குவிக்க; சதம் அடித்தார் ஓஷத

321

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (27) சமநிலையில் நிறைவடைந்தன.

இந்த இரண்டு போட்டிகளினதும் கடைசி நாளான இன்றைய தினம் காலி அணியின் சகலதுறை வீரரான சுமிந்த லக்ஷான் மற்றும் கண்டி அணியின் ஓஷத பெர்னாண்டோ ஆகிய இருவரும் சதமடித்து அசத்த, ஜப்னா அணியின் தலைவர் சதீர சமரவிக்ரம 96 ஓட்டங்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும், முதல் இன்னிங்ஸிலும் ஜப்னா அணிக்காக அரைச்சதம் கடந்து பெறுமதியான 58 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், கண்டி அணிக்காக முதல் இன்னிங்ஸில் சதமடித்து கைகொடுத்த அந்த அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ், 2ஆவது இன்னிங்ஸில் அரைச்சதம் அடித்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார்.

அதுமாத்திரமின்றி, இவ்விரண்டு போட்டிகளிலும் சேர்த்து 6 சதங்கள், 10 அரைச்சதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஜப்னா எதிர் கொழும்பு

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 555 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், போட்டியின் நான்காவதும், இறுதியுமான நாளான இன்று 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி 109.5 ஓவர்களில் 360 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கொழும்பு அணி சார்பில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரொஷேன் சில்வா, 19 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஜப்னா அணியின் பந்துவீச்சு சார்பில் கல்ஹார சேனாரட்ன, துனித் வெல்லாலகே மற்றும் கசுன் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து 195 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, 217 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

அவ்வணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் சதீர சமரவிக்ரம 96 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜப்னா அணி – 555 (173.4) – சமிந்த பெர்னாண்டோ 141, நவோத் பரணவிதான 77, துனித் வெல்லாலகே 74, கீத் குமார 63*, சந்தூஷ் குணதிலக்க 61, சதீர சமரவிக்ரம 58, பிரபாத் ஜயசூரிய 6/169, சம்மு அஷான் 2/62, லஹிரு மதுஷங்க 2/69

கொழும்பு அணி – 360 (109.5) – ரொஷேன் சில்வா 174*, கிரிஷான் சஞ்சுல 35, அஷேன் பண்டார 28, நுவனிது பெர்னாண்டோ 28, கசுன் மதுஷங்க 2/36, கல்ஹார சேனாரட்ன 2/44, துனித் வெல்லாலகே 2/117

ஜப்னா அணி – 217/5 (53.1) – சதீர சமரவிக்ரம 96, நிஷான் மதுஷ்க 40, அஷேன் பண்டார 2/25

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

காலி எதிர் கண்டி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 482 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, போட்டியின் நான்காவதும், இறுதியுமான நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பபசர வடுகே 128 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கி சிறப்பாக துடுப்பாடிய சுமிந்த லக்ஷான் சதம் கடந்து 138 பந்துகளில் 106 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர். முதல்தரப் போட்டிகளில் சுமிந்த லக்ஷானின் 5ஆவது சதம் இதுவாகும்.

கண்டி அணி சார்பாக சஹன் ஆராச்சிகே 3 விக்கெட்டுகளையும், நிபுன் ரன்சிக, அசித பெர்னாண்டோ மற்றும் அவிந்து தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து 17 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, 253 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

அவ்வணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஓஷத பெர்னாண்டோ 122 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

காலி அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் தனஞ்சய லக்ஷான் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 482 (120.1) – கமிந்து மெண்டிஸ் 111, லசித் குரூஸ்புள்ளே 93, லஹிரு உதார 92, கசுன் விதுர 58, சஹன் ஆராச்சிகே 52,ஹேஷான் ஹெட்டியாரச்சி 4/64, நிமேஷ் விமுக்தி 3/120, சானக ருவன்சிறி 2/96

காலி அணி – 465 (149.4) – பபசர வடுகே 128, சுமிந்த லக்ஷான் 106, ஹேஷான் ஹெட்டியாரச்சி 43, சங்கீத் குரே 36, சஹன் ஆராச்சிகே 3/62, நிபுன் ரன்சிக 2/66, அசித பெர்னாண்டோ 2/89, அவிந்து தீக்ஷன 2/110

கண்டி அணி – 253/5 (64.4) – ஓஷத பெர்னாண்டோ 122, கமிந்து மெண்டிஸ் 55, கசுன் விதுர 28, தனஞ்சய லக்ஷான் 3/24

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

இந்தப்போட்டித் தொடரின் மூன்றாவதும் மற்றும் நான்காவது போட்டிகள் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள 3ஆவது போட்டியில் கொழும்பு – தம்புள்ளை அணிகளும், பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள 4ஆவது போட்டியில் கண்டி – ஜப்னா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<