இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (25) நடைபெற்றது.
இதில் கண்டி அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் மற்றும் காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பபசர வடுகே ஆகிய இருவரும் சதங்களைப் பெற்றிருந்ததோடு, ஜப்னா அணி வீரர்களான துனித் வெல்லாலகே, கீத் குமார, சந்தூஷ் குணதிலக்க மற்றும் கண்டி அணியின் சஹன் ஆராச்சிகே ஆகிய வீரர்கள் இரண்டாம் நாள் ஆட்டங்களில் அரைச்சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.
இதேநேரம், கொழும்பு அணியின் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் ஜொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா எதிர் கொழும்பு
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸினை இன்று (25) தொடர்ந்த ஜப்னா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 555 ஓட்டங்களைக் குவித்தது.
ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் சமிந்த பெர்னாண்டோ (141) சதமடித்து அசத்த, நவோத் பரணவிதான (77), துனித் வெல்லாலகே (74), கீத் குமார (63*), சந்தூஷ் குணதிலக்க (61), சதீர சமரவிக்ரம (58) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 169 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.
பின்னர், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 3 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தடுமாறியது.
நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
ஜப்னா அணி – 555 (173.4) – சமிந்த பெர்னாண்டோ 141, நவோத் பரணவிதான 77, துனித் வெல்லாலகே 74, கீத் குமார 63*, சந்தூஷ் குணதிலக்க 61, சதீர சமரவிக்ரம 58, பிரபாத் ஜயசூரிய 6/169, சம்மு அஷான் 2/62, லஹிரு மதுஷங்க 2/69
கொழும்பு அணி – 3/2 (4)
- ஜப்னா அணிக்காக சதமடித்த சமிந்த பெர்னாண்டோ
- நாளை ஆரம்பமாகும் நெஷனல் சுபர் லீக் – முதல்தர தொடர்
- டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் சம்பியனாக முடிசூடியது ஜப்னா!
காலி எதிர கண்டி
இளம் வீரர் கமிந்து மெண்டிஸின் சதத்தின் மூலம் காலி அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று (25) தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கண்டி அணி 482 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன்போது 90 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் சதம் கடந்து 111 ஓட்டங்களையும், சகலதுறை வீரர் சஹன் ஆராச்சிகே 52 ஓட்டங்களையும் பெற்று வலுசேர்த்தனர்.
முன்னதாக, போட்டியின் முதல் நாளான நேற்று லசித் குரூஸ்புள்ளே (93), லஹிரு உதார (92) ஆகிய இருவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதுடன், கசுன் விதுர 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பபசர வடுகே 100 ஓட்டங்களையும், சச்சிந்த பீரிஸ் 6 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.
நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
கண்டி அணி – 482/10 (120.1) – கமிந்து மெண்டிஸ் 111, லசித் குரூஸ்புள்ளே 93, லஹிரு உதார 92, கசுன் விதுர 58, சஹன் ஆராச்சிகே 52, ஹேஷான் ஹெட்டியாரச்சி 4/64, நிமேஷ் விமுக்தி 3/120, சானக ருவன்சிறி 2/96
காலி அணி – 185/3 (58) – பபசர வடுகே 100*, சங்கீத் குரே 36
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<