டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் சம்பியனாக முடிசூடியது ஜப்னா!

Dialog-SLC National Super League 2022

1775
Dialog-SLC National Super League 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக நடைபெற்ற டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில், கண்டி அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜப்னா அணி சம்பியனாக முடிசூடியது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்னா அணிக்கு வழங்கியது. போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாக ஆரம்பமானாலும், அணிக்கு தலா 50 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.

>> உபாதை காரணமாக பல மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் அவிஷ்க!

அதனடிப்படையில் களமிறங்கிய ஜப்னா அணிசார்பாக அணித்தலைவர் சதீர சமரவிக்ரம மற்றும் சமிந்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய துனித் வெல்லாலகே மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர்.

இதன்போது ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட போதும், மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது. இதில் நிஷான் மதுசங்க 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை இளையோர் அணியின் தலைவர் துனித் வெல்லாலகே, நிமந்த மதுசங்கவுடன் துடுப்பெடுத்தாடி தன்னுடைய அரைச்சதத்தையும் பதிவுசெய்தார்.

நிமந்த மதுசங்க 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடிய துனித் வெல்லாலகே 74 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்புடன் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. எனினும், பின்னர் ஆரம்பித்த இந்த போட்டியில் அணிக்கு 49 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் பின்வரிசையில் ரவிந்து பெர்னாண்டோ அணிக்காக மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி 41 ஓட்டங்களை குவிக்க, ஜப்னா அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 258 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட அசித பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை வீழ்த்த, சச்சிந்து கொலம்பகே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணிக்கு ஆரம்பம் மோசமானதாக அமைந்திருந்தது. லஹிரு உதார, ஓசத பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே மற்றும் கவீன் பண்டார ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கண்டி அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை விளாசி வெற்றியிலக்குக்கான புத்துயிரை கொடுத்தனர். எனினும், சஹான் ஆராச்சிகே 33 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க கண்டி அணியின் வெற்றிக்கனவு சரியத்தொடங்கியது.

இவர்களை தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட புலின தரங்கவும் ஆட்டமிழக்க, 164 ஓட்டங்களுக்கு கண்டி அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. கண்டி அணியின் நம்பிக்கை முழுமையாக வீழ்ச்சியடைய தீக்ஷில டி சில்வா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தீக்ஷில டி சில்வா வெறும் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை விளாசியிருந்த போதும், முக்கியமான தருணத்தில் நிமந்த மதுசங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் கண்டி அணியின் வெற்றிக்கனவு தகர்க்கப்பட்டது. எனவே, கண்டி அணி இறுதியாக 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்று, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஜப்னா அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளையும், நிமந்த மதுசங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜப்னா அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். எனவே, முதன்முறையாக நடைபெற்ற டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் சம்பியனாக ஜப்னா அணி மகுடம் சூடியது.

விருதுகள்

  • தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – புலின தரங்க (கண்டி)
  • தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – நுவனிந்து பெர்னாண்டோ (கொழும்பு)
  • தொடர் ஆட்டநாயகன் – தனன்ஜய டி சில்வா (ஜப்னா)
  • ஆட்டநாயகன் (இறுதிப்போட்டி) – துனித் வெல்லாலகே

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<