T20I உலகக் கிண்ண சம்பியன்களுக்கு சவால் தருமா இலங்கை??

Sri Lanka tour of Australia 2022

484

மற்றுமொரு T20I உலகக் கிண்ணம் இந்த ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த T20I உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவில், இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது.

இந்த T20I தொடர் சிட்னியில் நாளை (11) ஆரம்பமாகும் நிலையில், இந்த தொடர் குறித்த முன்னோட்டத்தினை நோக்குவோம்.

>>WATCH – குசல் மெண்டிஸ் விலகல்? ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார்? கூறும் தசுன் ஷானக!

இலங்கை – அவுஸ்திரேலியா கடந்த காலப் போட்டிகள்

இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் 2007ஆம் ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டியொன்றின் மூலமாக முதல் முறை T20I போட்டியொன்றில் ஆடியிருந்தன.

இந்தப் போட்டி தவிர்த்து, இரு அணிகளும் இதுவரை 17 T20I போட்டிகளில் ஆடியிருப்பதோடு அதில் அவுஸ்திரேலிய அணி 9 போட்டிகளில் வெற்றியினையும், இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் விளையாடிய இறுதி 5 T20I போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருப்பதோடு, இறுதியாக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரினை 3-0 எனப் பறிகொடுத்து வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த T20I உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி இலங்கையினை வீழ்த்தியதோடு, கடந்த காலப் போட்டிகளினை நோக்கும் போது, அவுஸ்திரேலிய அணி இலங்கையுடன் T20I போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதனை காணக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கை அணி

அண்மையில் பல மாற்றங்களைச் சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒப்பிட்டு அடிப்படையில் நோக்கும் போது கடந்த ஆண்டில் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து T20I போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியது என்றே கூற முடியும்.

>>ஐ.சி.சி. இன் மாதத்திற்குரிய சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்குரிய பரிந்துரையில் சமரி அத்தபத்து

முன்னணி வீரர்கள் இல்லாத போதும் இலங்கை அணி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாம் விளையாடியிருந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை கைப்பற்றி சிறந்த ஆரம்பத்தினை பெற்றிருந்தது. எனினும் ஜிம்பாப்வே தொடரில் இருந்ததனை விட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை வீரர்களுக்கு அதிக சவால்கள் காணப்படும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

இதோடு இந்த ஆண்டுக்கான T20I உலகக் கிண்ணமும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருப்பதன் காரணமாக, இலங்கை அணிக்கு அந்த நாட்டின் சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை அறிவதற்கு நடைபெறவிருக்கும் T20I தொடர் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த T20I தொடருக்கான இலங்கை குழாத்தினை நோக்கும் போது அணியில் முக்கிய வரவாக தனுஷ்க குணத்திலக்கவின் மீள் வருகையினைக் குறிப்பிட முடியும். அச்சமின்றிய ஆட்டத்தினை வெளிப்படுத்தும் தனுஷ்க குணத்திலக்க, தடுமாற்றத்தில் உள்ள இலங்கை T20I அணியின் ஆரம்பவரிசையை சீர்செய்வார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் முக்கிய அதிரடி துடுப்பாட்டவீரர்களான குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ ஆகிய வீரர்களுக்கு அவுஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதோடு தனன்ஞய டி சில்வாவிற்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.  இது இலங்கை அணிக்கு ஒரு பலவீனம் என்ற போதும் அவர்களின் இடம் இளம் வீரர்களான சரித் அசலன்க, அறிமுக வீரர் ஜனித் லியனகே, ரமேஷ் மெண்டிஸ் போன்றவர்கள் மூலம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறைக்கு இன்னும் பலம் சேர்க்கின்ற வீரர்களாக அணித்தலைவர் தசுன் ஷானக்க, தினேஷ் சந்திமால் மற்றும் பெதும் நிஸ்ஸங்க போன்ற வீரர்கள் காணப்படுகின்றனர்.

அதோடு இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையானது அணிக்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, சாமிக்க கருணாரட்ன போன்ற வீரர்ளுடன் பலப்படுத்தப்படுகின்றது. இன்னும் நுவான் துஷார, ஜெப்ரி வன்டர்சே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியவர்களும் இலங்கை அணிக்கு மேலதிக நம்பிக்கைகுரிய பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர்.

இன்னும் இலங்கை அணியின் பயிற்றுவிப்புக் குழாமானது ஆலோசக பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன, வேகப்பந்து ஆலோசகர் லசித் மாலிங்க ஆகியோருடன் இருப்பதால் இலங்கை வீரர்களுக்கு இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>புகலிடம் கோரிய ஆப்கான் கிரிக்கெட் அணி உறுப்பினர்கள்??

இலங்கை அணி – தசுன் ஷானக (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, கமில் மிஷார, ரமேஷ் மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, நுவான் துஷார, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ

அவுஸ்திரேலிய அணி

T20I உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களாக இருக்கும் அவுஸ்திரேலிய அணி, அவர்களின் T20I உலகக் கிண்ண நாயகர்களாக இருந்த டேவிட் வோர்னர் மற்றும் மிச்சல் மார்ஷ் போன்றோருக்கு இலங்கை தொடரில் ஓய்வு வழங்கிய போதும், இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு எந்தவிதத்திலும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது அவ்வணிக்கு பலம் தரக்கூடிய வீரர்களாக அணித்தலைவர் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் இன்ங்லிஷ் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் தவிர கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், போன்ற சகலதுறை வீரர்களுடன் சேர்த்து மெதிவ் வேடும் அணிக்காக தமது சேவையினை வழங்க காத்திருக்கின்றார்.

>>மாலிங்கவின் வழிகாட்டல் அணிக்கு கூடுதல் பலம் – தசுன் ஷானக

இதேநேரம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக மிகப் பலம்பொருந்திய பந்துவீச்சு வரிசையினை களமிறக்குவதற்கு காத்திருக்கின்றது. வேகப்புயலான மிச்சல் ஸ்டார்க் தலைமையிலான இந்த பந்துவீச்சு வரிசையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசல்வூட் ஆகியோர் இடம்பெற்றிருப்பதோடு ஜை ரிச்சர்ட்ஸன் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. வேகப்பந்துவீச்சாளர்கள் தவிர அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்துவீச்சுத்துறைக்கு அடம் ஷம்பா மற்றும் அஸ்டன் ஏகார் ஆகிய இருவரும் பலம் சேர்க்கின்றனர்.

அவுஸ்திரேலிய குழாம்

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), அஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வூட், மொய்சஸ் ஹென்ரிக்குஸ், ஜோஸ் இன்ங்லிஸ், பென் மெக்டெர்மோட், கிளன் மெக்ஷ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்திவ் வேட், அடம் ஷம்பா, ட்ராவிஸ் ஹெட் (இறுதி இரண்டு T20I போட்டிகளுக்கு மாத்திரம்), டேனியல் சேம்ஸ்

இறுதியாக

ஒட்டுமொத்தமாக நோக்கும் போதும், சொந்த மைதானத்தில் இலங்கையினை எதிர்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணியே, இந்த T20I  தொடரினை கைப்பற்றுவதற்கான எதிர்பார்ப்பு அணியாக காணப்படுகின்றது. எனினும், அதிர்ச்சிகளை பரிசளிப்பதில் கைதேர்ந்த இலங்கை அணியினையும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. எனவே, முடிவுகள் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இலங்கை – அவுஸ்திரேலிய T20I தொடர் போட்டி அட்டவணை

பெப்ரவரி 11 – முதல் T20I போட்டி – சிட்னி

பெ்பரவரி 13 – இரண்டாவது T20I போட்டி – சிட்னி

பெப்ரவரி 15 – மூன்றாவது T20I போட்டி – கென்பர்ரா

பெப்ரவரி 18 – நான்காது T20I போட்டி – மெல்பர்ன்

பெப்ரவரி 20 – ஐந்தாவது T20I போட்டி – மெல்பர்ன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<