மாலிங்கவின் வழிகாட்டல் அணிக்கு கூடுதல் பலம் – தசுன் ஷானக

817

இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவது தமது அணிக்கு கூடுதல் பலம் என இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடப்பு T20 உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தமது அணி வீரர்கள் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தொலைக்காணொளி தொழிநுட்பத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள T20i தொடரில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு தசுன் ஷானக கருத்து தெரிவிக்கையில்,

“லசித் மாலிங்கவிடம் இருந்து மிகப் பெரிய பங்களிப்பு கிடைக்கின்றது. கிரிக்கெட்டில் உச்சத்தைத் தொட்ட வீரரொருவரின் அனுபவத்தையும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய பாக்கியம். அவரும் இவ்வாறான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அதை கையாண்டும் இருக்கிறார். அணித் தலைவராக நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அவ்வாறான வீரரொருவர் இலங்கை அணியின் ஆலோசகராக இணைந்துகொண்டமை எமக்கு மிகப்பெரிய பலமாகும்” என தெரிவித்தார்.

இதனிடையே, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இலங்கை பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இலங்கை அணியின் ஆயத்தம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் பல வலைப்பயிற்சிகளில் கலந்துகொண்டோம். அதேபோல, வீரர்களுக்கிடையில் பயிற்சிப் போட்டியொன்றிலும் விளையாடினோம். இங்கு தற்போது சற்று சீரற்ற காலநிலை காணப்படுகின்றது. ஆனால் இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் காலநிலை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாகத்தான் இருக்கும். எதிரணிக்கு சாதகமாக ஒருபோதும் ஆடுகளங்கள் தயார்படுத்த மட்டார்கள்.

எனவே, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தான் நாங்களும் விளையாடவுள்ளோம். பெரும்பாலும் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய அணியுடன் தான் இந்தத் தொடரில் களமிறங்க எதிர்பார்த்துள்ளோம். 2 வேகப் பந்துவீச்சாளர்கள், 2 சகலதுறை வீரர்கள், 2 சுழல் பந்துவீச்சாளர்களுடன் தான் விளையாடினோம். அதே வியூகத்தைத் தான் இந்தத் தொடரிலும் கையாள எதிர்பார்த்துள்ளோம்” என கூறினார்.

இதேவேளை, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்பது தொடர்பிலும், அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்யடுமா என்பது தொடர்பிலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தசுன் ஷானக கருத்து தெரிவிக்கையில்,

”ஆரம்ப வீரர்கள் யார் என்பது தொடர்பில் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளருடன் கலந்துரையாடியுள்ளேன். போட்டியின் தன்மையைப் பொறுத்து தான் அதுகுறித்து இறுதி முடிவு எடுப்போம். கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் பெதும் நிஸ்ஸங்க ஆரம்ப வீரராக களமிறங்கினார். எனவே நிச்சயம் அவர் இந்தத் தொடரிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடுவார். ஆகவே பெதும் நிஸ்ஸங்கவுடன் விளையாடுகின்ற மற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார் என்பதை போட்டியை வைத்து நாங்கள் தீர்மானிப்போம்.

ஆடுகளத்தின் தன்மையையும், போட்டியையும் பொறுத்து துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படலாம். நான் வழமையான இடத்தில் தான் களமிறங்குவேன். சரித் அசலங்கவை பின்வரிசையில் களமிறக்க மாட்டோம். அவர் வழக்கம்போல 3ஆம் இலக்க வீரராக விளையாடுவார். ஆனாலும், T20 உலகக் கிண்ண அணியுடன் ஒப்பிடும் போது தற்போதுள்ள அணியில் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்யப்படும்.

அதேபோல, கொரோனா வைரஸ் காரணமாக குசல் மெண்டிஸ் முதல் T20i போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவரைத் தவிர எங்களிடம் தற்சமயம் மூன்று விக்கெட் காப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக செயல்படுவார்” என குறிப்பிட்டார்.

இறுதியாக, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்துகொண்டுள்ள சாமிக்க கருணாரட்ன மற்றும் நுவன் துஷார தொடர்பில் பேசிய அவர்,

”அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக எம்முடன் பயிற்சிகளில் இணைந்திருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இருவருக்கும் எம்மோடு அவுஸ்திரேலியா வரமுடியாமல் போனது. நுவன் துஷார கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியா வந்தார். அதேபோல சாமிக்க கருணாரட்னவும் தற்போது அவுஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அணியுடன் இணைந்துகொள்வார். எனவே, குறித்த இரண்டு வீரர்களும் அணித்தேர்வில் நிச்சயம் இருப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது T20i போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<