‘Red Bull Ride My Wave’ போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவு

273

Red Bull Ride My Wave கடல் அலைச் சறுக்கல் போட்டித் தொடர் கடந்த ஜனவரி 29ஆம், 30ஆம் திகதிகளில் ஹிக்கடுவை கடல் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இலங்கையில் உள்ள கடல் அலைச் சறுக்கல் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும், கடல் அலைச் சறுக்கல் விளையாட்டுக்கு இலங்கை பொருத்தமான நாடு என்பதை உலகறியச் செய்யும் நோக்கிலும் 6ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் 130 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றினர்.

இம்முறை Red Bull Ride My Wave போட்டித் தொடரில் ஆண்கள் பிரிவுக்கான போட்டிகள் 96 சுற்றுகளாக இடம்பெற்றதுடன், இதில் 81 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான 2ஆவது தகுதிச்சுற்று, 12 சுற்றுகளைக் கொண்டிருந்ததுடன் அதில் 45 பேர் பங்குபற்றியிருந்தனர். அதன்பிறகு 6 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற 3ஆவது சுற்றில் 18 பேர் பங்குபற்றியிருந்ததுடன், அதிலிருந்து 12 பேர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

>>Photos – Red Bull Ride My Wave 2022

தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் 6 பேரும், அதிலிருந்து 4 பேர் இறுதிச்சுற்றுக்கும் தெரிவானதுடன், ‘King of the Wave’ (அலையின் ராஜா) பட்டத்திற்காக அவர்கள் போட்டியிட்டனர்.

பெண்களுக்கான முதல் தகுதிச் சுற்றில் 23 பேர் கலந்து கொண்டதுடன் அது 8 சுற்றுகளைக் கொண்டிருந்தது. அதன் காலிறுதிப் போட்டிகள் 4 சுற்றுகளைக் கொண்டதாக 16 பேருடன் இடம்பெற்றிருந்தது. அதன் அரை இறுதியில் 8 பேர் கலந்துகொண்டதோடு, 4 பேர் ‘Queen of the Wave’ (அலையின் ராணி) பட்டத்திற்காக போட்டியிட்டனர்.

இதன்படி, ஆண்களுக்கான திறந்த பிரிவில் 13.8 புள்ளிகளைப் பெற்ற லக்சித தாரக முதலிடத்தைப் பெற்று ‘அலையின் ராஜா’ பட்டத்தை தட்டிச் சென்றார்.

சச்சின் தாரக 12.4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், 10.6 புள்ளிகளுடன் Steeve Seilly 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>தேசிய கடல் அலை சறுக்கல் சம்பியன்ஷிப் தொடர் அறுகம்பையில்

பெண்களுக்கான திறந்த பிரிவில் அபாரமாக விளையாடி 11.5 புள்ளிகளைப் பெற்ற Nikita Rob தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக ‘அலையின் ராணி’ பட்டத்தை வென்றார்.

Cameroon Heinamann 5.6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், 4.9 புள்ளிகளைப் பெற்ற Krõõt Laesson 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்ளுக்கு கிண்ணங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, Red Bull Ride My Wave போட்டித் தொடரின் பணிப்பாளர் சந்திக துஷார இந்தப் போட்டித் தொடர் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு Red Bull Ride My Wave போட்டித் தொடரில் பெண்கள் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்குபற்றுவதையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறாக இலங்கையில் கடல் அலைச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு பலமாக இருக்க முடிந்ததையிட்டு நாம் பெருமையடைகிறோம். எதிர்காலத்தில் அதிகளவான விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் இணைவார்கள் என்பது எமது நம்பிக்கை” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, எஸ்தோனியா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, ரஷ்யா, சுவீடன், அமெரிக்கா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கடல் அலைச் சறுக்கல் வீரர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<