ஆசிய லயன்ஸ் அணிக்கு இரண்டாவது தோல்வி

2371

ஓமானில் நடைபெற்று வருகின்ற லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரில், நேற்று (26) வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி ஆசிய லயன்ஸ் வீரர்களை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>உபுல் தரங்க, ஆப்கானின் அதிரடியுடன் மஹாராஜாஸை வீழ்த்திய லயன்ஸ்

இப்போட்டியின் வெற்றி வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிக்கு லெஜன்ட்ஸ் லீக் தொடரில் இரண்டாவது வெற்றியாகவும், ஆசிய லயன்ஸ் அணிக்கு இரண்டாவது தோல்வியாகவும் அமைகின்றது.

இதேவேளை ஆசிய லயன்ஸ் அணி, தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாக தற்போது இந்திய மஹாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிகள் இடையிலான குழுநிலைப் போட்டியின் முடிவினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி வீரர்கள், முதலில் ஆசிய லயன்ஸ் வீரர்களை துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தனர்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆசிய லயன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.

ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அஸ்கார் ஆப்கான் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

மறுமுனையில் RJ சைட்போட்டம் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி, குறித்த வெற்றி இலக்கினை வெறும் 13 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 152 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>இலங்கை கிரிக்கெட் இந்தியாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கெவின் பீட்டர்சன் அதிரடியான முறையில் ஆடி 38 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதோடு கெவின் ஓ பிரய்னும் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று தனது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

ஆசிய லயன்ஸ் பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 2 விக்கெட்டுக்களையும், நுவன் குலசேகர ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆசிய லயன்ஸ் – 149/7 (20) அஸ்கர் ஆப்கான் 41, மோர்னே மோர்கல் 24/2, RJ சைட்போட்டம் 38/2

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் – 152/3 (13) கெவின் பீட்டர்சன் 86, முத்தையா முரளிதரன் 22/2

முடிவு – வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<