சகலதுறை வீரராக மீண்டும் விளையாடுவேன்: ஹர்திக் பாண்ட்யா உறுதி

308

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் சகலதுறை வீரராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக அந்த அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. இதனால் துடுப்பாட்ட வீரராக மாத்திரமே அவர் விளையாடினார். ஆனால் துடுப்பாட்டத்திலும் அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

அதன் பிறகு, T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். இதனையடுத்து நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டையேனும் அவரால் வீழ்த்த முடியாமல் போனது.

இதனிடையே, T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துடுப்பாடிய போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வந்தார்.

இதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலும் இடம்பெறவில்லை.

எனவே, பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்திக் பாண்ட்யா மீது அதீத நம்பிக்கை வைத்த அஹமதாபாத் அணி, இந்த ஆண்டு IPL தொடரில் அவரை தலைவராக நியமித்து ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது தொடர்பிலும், தனது தற்போதைய நிலை குறித்தும் ஹர்திக் பாண்ட்யா Hindustan Times பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் சகலதுறை வீரராக விளையாடுவதே எனது திட்டம். அதற்காகத்தான் நான் தயாராகி வருகிறேன். அது சரியாக அமையாவிட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், எனது பயிற்சி, எனது உழைப்பு

அனைத்து சகலதுறை வீரராக விளையாடுவதை இலக்காக வைத்துத்தான் இருக்கும்.

ஒரு சகலதுறை வீரராக செயல்பட முடியும் என்ற மன உறுதி என்னிடம் வந்துள்ளது. எனது உடலில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் சகலதுறை வீரராகத்தான் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக இணைந்துள்ள அஹமதாபாத் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். அணி விரும்பும் சூழலை உருவாக்கித் தருவேன். நல்ல மனநிலையில், நல்ல சூழலில் இருப்பது போல வீரர்கள் உணர வேண்டும். அதற்காக எனது பூரண பங்களிப்பினை வழங்கவுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தான் முழு உடற்தகுதி பெற்றதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் MS டோனியே காரணம் என அவர் கூறியுள்ளார்.

நான் எல்லோரிடமும் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக டோனியிடம் இருந்து கற்றுள்ளேன். நான் முதன் முதலில் அவரிடம் சென்ற போது, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் தவறு செய்வதை அவர் அறிவார்.

இருப்பினும், அதற்கு அனுமதிப்பார். ஏனென்றால், தாம் செய்யும் தவறில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கக்கூடியவர் அவர். நானும் பல தவறுகளை செய்து நிறைய மாற்றிக்கொண்டுள்ளேன்.

நாம் ஒவ்வொரு விடயத்தை கற்கும் போதும், அதற்கு நான் தான் காரணம் என்பது போல டோனி என்றுமே காட்டிக்கொள்ள மாட்டார். தாமாகவே கற்றுக்கொண்டது போல தான் அவரின் செயல்கள் இருக்கும். ஆனால் எப்போதுமே டோனிதான் எனது மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளார் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<