இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய T20 குழாம் அறிவிப்பு

5258
McDermott, Hazlewood

பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கெடுக்கும், அவுஸ்திரேலிய T20 அணிக் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> தமது பெயர் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட லக்னோவ் அணி

இந்த T20 குழாத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது உபாதைக்கு ஆளான வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட், குறித்த உபாதையில் இருந்து மீண்டதனை அடுத்து இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக காணப்படும் பென் மெக்டெர்மேடும், இலங்கைக்கு எதிரான T20 போட்டிகளுக்காக உள்வாங்கப்பட்டிருக்கின்றார். பென் மெக்டெர்மோட் 2021/22ஆம் ஆண்டுகளுக்குரிய பருவகாலத்திற்கான பிக் பேஷ் லீக் தொடரில் 153.86 என்கிற Strike Rate உடன் 577 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் பிக் பேஷ் லீக் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மற்றுமொரு வீரரான மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆஷஸ் தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்ற ட்ராவிட் ஹெட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்ஸன் போன்ற வீரர்களும், அவுஸ்திரேலிய T20 குழாத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

>> உபுல் தரங்க, ஆப்கானின் அதிரடியுடன் மஹாராஜாஸை வீழ்த்திய லயன்ஸ்

இதேநேரம் அதிரடி துடுப்பாட்டவீரரான டேவிட் வோர்னர், மிச்சல் மார்ஷ் ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தவிர அவுஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரும் இலங்கை தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். எனவே, இலங்கைக்கு எதிரான T20 தொடரின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக அன்ட்ரூவ் மெக்டொனால்ட் செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் பங்கெடுக்கும் T20 தொடரின் போட்டிகள் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கென்பரா ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய T20 குழாம்

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), அஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்குஸ், ஜோஸ் இன்ங்லிஸ், பென் மெக்டெர்மோட், கிளன் மெக்ஷ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்திவ் வேட், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<