மெய்வல்லுனர் சங்க நூற்றாண்டு விழா அரை மரதனில் சண்முகேஸ்வரனுக்கு மூன்றாமிடம்

292
Sri Lanka Athletics Centaury Marathon

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று (22) காலை நடைபெற்ற அரை மரதன் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடங்களை இந்திய வீர வீராங்கனைகள் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மொத்தம் 21 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற இந்த அரை மரதன் ஓட்டப்போட்டியானது பத்தரமுல்லை தியத்த உயனவுக்கு அருகில் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கொடியை அசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவுகள் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை இந்தியாவின் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலமும் 05 நிமிடங்கள் 02 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இதனிடையே, போட்டியை ஒரு மணித்தியாலமும் 7 நிமிடங்கள் 15 செக்கன்களில் நிறைவு செய்த இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திரன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மரதன் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த குமார்  சண்முகேஸ்வரன் இப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இவர் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலமும் 7 நிமிடங்கள் 28 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். இப்போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே இலங்கை இராணுவத்தின் தர்ஷன சந்தருவன் (ஒரு மணித்தியாலம் 7 நிமிடங்கள் 34 செக்கன்கள்) டிலான் சந்தருவன் (ஒரு மணித்தியாலம் 7 நிமிடங்கள் 47 செக்கன்கள்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை இந்தியாவின் சஞ்ஜீவனி ஜாதவ் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலமும் 16 நிமிடங்கள் 06 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இப்போட்டியில் இரண்டாவது இடத்தை ஒரு மணித்தியாலமும் 19 நிமிடங்கள் 48 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த மதுமாலி பெரேரா பெற்றுக்கொள்ள, மூன்றாவது இடத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சாமினி சமுதிக்கா பெற்றார். இவர் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களில் ஓடி முடித்தார்.

இப்போட்டியில் நான்காவது இடத்தை இலங்கை இராணுவத்தின் நிசன்சலா பண்டார (ஒரு மணித்தியாலம் 23 நிமிடங்கள் 39 செக்கன்கள்) பெற்றுக்கொண்டதுடன், ஐந்தாவது இடத்தை இலங்கை கடற்படையின் நிலூஷி பெர்ணான்டோ (ஒரு மணித்தியாலம் 24 நிமிடங்கள் 24 செக்கன்கள்) பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஆரோக்கியத்துக்கான ஓட்டப் போட்டியின் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியின் ஆண்கள் பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க மத்திய வித்தியாலய மாணவன் யஹலிய சங்கீத் முதலிடத்தைப் பிடித்தார். இவர் போட்டித் தூரத்தை 14 நிமிடங்கள் 03.01 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இப்போட்டியில் 15 நிமிடங்கள் 09.00 செக்கன்களில் ஓடி முடித்த கந்தானை புனித செபஸ்தியன் கல்லூரி மாணவன் விஹங்க பிரபோத் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், திவுலப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவனான அனுஷ்க லக்ஷான் 15 நிமிடங்கள் 14 செக்கன்களில் ஓடி முடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பெண்கள் பிரிவில் ஜா எல துடெல்ல நிமல மரியா வித்தியாலயத்தின் ஒஷாதினி நிலுமிக்கா முதலிடத்தையும், குளியாப்பிட்டிய இஹல கடிகமுவ மத்திய வித்தியாலயத்தின் அயேஷா சந்துமினி இரண்டாவது இடத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் ரஷ்மி அமண்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதேவேளை, போட்டியின் பிறகு இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களுக்கு பணப்பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<