உபுல் தரங்க, டில்ஷானின் அதிரடியோடு ஆசிய லயன்ஸ் வெற்றி

7422

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், ஆசிய லயன்ஸ் அணி வேர்ல்ட் ஜயன்ட்ஸ் வீரர்களை உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் அதிரடியோடு 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>அசத்தல் பந்துவீச்சுடன் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

லெஜன்ட்ஸ் லீக் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று

(21) ஓமானின் மஸ்கட் நகரில் ஆரம்பாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆசிய லயன்ஸ் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி கெவின் ஓ பிரெய்னின் அதிரடியான துடுப்பாட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதத்தினை தவறவிட்ட கெவின் ஓ பிரெய்ன் 46 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிய லயன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நுவன் குலசேகர, மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஆசிய லயன்ஸ் அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய மஹராஜாஸ் அணி

ஆசிய லயன்ஸ் அணியின் வெற்றியினை அதிரடி துடுப்பாட்டத்தோடு உறுதி செய்திருந்த உபுல் தரங்க 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, அது உபுல் தரங்கவிற்கு தொடரில் இரண்டாவது அரைச்சதமாகவும் மாறியது. இதேநேரம், திலகரட்ன டில்ஷான் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் மோர்னே மோர்கல் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியுடன் ஆசிய லயன்ஸ் அணி, லெஜன்ட்ஸ் லீக் தொடரில் தம்முடைய இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் – 205/7 (20) கெவின் ஓ பிரெய்ன் 95, நுவான் குலசேகர 17/2, மொஹமட் ஹபீஸ் 32/2

ஆசிய லயன்ஸ் – 209/4 (19.1) உபுல் தரங்க 63, திலகரட்ன டில்ஷான் 52, மோர்னே மோர்கல் 38/2

முடிவு – ஆசிய லயன்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<