தங்க மகன் தினேஷ் பிரியந்தவிற்கு புதிய வீடு அன்பளிப்பு

347

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பில் விளையாட்டு விழா ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய வீடொன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட இவ்வீட்டிற்கான ‘அன்பளிப்பு பத்திரம்’ பிரதமரினால் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அலரி மாளிகையில் வைத்து நேற்றுமுன்தினம் (19) வழங்கிவைக்கப்பட்டது.

டோக்கியோ பாராலிம்பில் உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக்கொடுக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 08ஆம் திகதி பிரதமர் குறிப்பிட்டிருந்ததற்கு அமைய குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய கொழும்பு 02 கொம்பனித்தெருவில் அமைந்துள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்பு திட்டத்தின் 40 A 4/10 இலக்க வீடு தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு வழங்கப்பட்டது.

தற்போது இலங்கையில் பாரா வீர வீராங்கனைகளின் திறமை உயர் மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் தேசிய விளையாட்டு போட்டியில் பாரா விளையாட்டுகளையும் சேர்க்கும் யோசனை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.

இதனிடையே, பாரா வீர வீராங்கனைகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது பாராட்டுக்குரிய விடயமாகும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வின் போது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், விளையாட்டு

மேம்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, பாராலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேர்னல் தீபால் ஹேரத், பாராலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் அம்பேமொஹொட்டி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் (காணி) அனுர பிரசன்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் (வீடு) ரத்ன குமார மற்றும் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<