சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மீளப் பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் சபையும் சற்றுமுன்னர் ஊடக அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி தனது ஓய்வை உறுதிப்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபைக்கு பானுக்க ராஜபக்ஷ கடிதம் அனுப்பியிருந்ததுடன், உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெறுவது சிரமம் என்ற காரணத்தால் அவர் இந்த திடீர் முடிவை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப நலனைக் கருத்திற்கொண்டும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவிச்சாளர் லசித் மாலிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பானுக்க ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நேற்று (12) அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
- விளையாட்டுத்துறை அமைச்சர் பானுக்கவிடம் விடுத்துள்ள கோரிக்கை
- ராஜபக்ஷ ஓய்வு பெறுவதனை மறுபரிசீலிக்கவும் – லசித் மாலிங்க
- ஓய்வு பெறப்போவதாக கூறியிருக்கும் பானுக ராஜபக்ஷ
இந்த சந்திப்பின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்தே பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மீளப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் சபையும் இன்று (13) அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருந்ததுடன், அவருடைய ஓய்வு அறிவிப்பை உடன் அமுலுக்கும் வரும் வகையில் மீளப் பெறுதாகவும் ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை பானுக்க ராஜபக்ஷ எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, ஏதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜிம்பாப்வே அணிக்கெதிராக இன்று (13) அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் குழாத்தில் பானுக்க ராஜபக்ஷ இடம்பெறவில்லை. ஆனாலும், அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20i தொடரில் அவர் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான பானுக்க ராஜபக்ஷ, இலங்கை அணிக்காக இதுவரை 5 ஒருநாள் மற்றும் 18 T20i போட்டிகளில் விளையாடி 409 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற LPL தொடரில் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிக்கு தலைவராக செயல்பட்டு அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<